தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையை மேம்படுத்தி கொடுக்கும்படி கடிதம் ஒன்றினை எழுதிக் கொடுத்துள்ளார்.
அக்கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது :-
தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் சொல்ல முடியாத வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களின் பிரச்னைகளை யாரும் கவனிக்காத சூழலில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தனித்துறையை ஏற்படுத்தி நலத் திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தியும் காட்டினார். இது மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்று தெரிவித்தார்.
மேலும் அவர், ஆனாலும், தமிழகத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உதவித் தொகையை உயர்த்தி வழங்கி கண்ணியமான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென தொடர்ந்து போராடி வருகின்றனர் என்று கூறியதுடன் மட்டுமின்றி, மாற்றுத் திறனாளிகளில் பெரும்பாலோனார் ஏழை, எளிய, அன்றாட கூலித் தொழிலாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அண்டை மாநிலங்களான புதுச்சேரியில் ரூ.4800, தெலங்கானாவில் ரூ.4000, ஆந்திராவில் சாதாரண ஊனமுற்றோருக்கு ரூ.6000, கடும் ஊனமுற்றோருக்கு ரூ.10,000, வீட்டை விட்டு வெளியே நடமாட இயலாத கடும் ஊனமுற்றோருக்கு ரூ.15,000 மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருவதாகவும் தமிழகத்தில் மட்டும் குறைவான உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று சுட்டிக் காட்டிய அவர் தமிழகத்திலும் அவ்வாறு உயர்த்தி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூ. 6,000 மற்றும் கடும் ஊனமுற்றோருக்கு ரூ. 10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். உதவித் தொகைக்கு விண்ணப்பித்து உதவித் தொகை கிடைக்காமல் நீண்ட காலமாக காத்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும் என குறிப்பிட்டதுடன், டெல்லி உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி AAY குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர் அனைவருக்கும் உடனடியாக குடும்ப அட்டை வழங்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.