சாலை பணியில் ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு !
சாலைகளில் குண்டும் குழியுமாக இருப்பதால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் பணிக்குச் செல்லும் பணியாளர்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பயணிப்பதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. செலவிற்காக 15 மண்டலங்களுக்கும் தலா 10 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 942 சாலைகளில் பராமரிப்பு பணிகளை சரி செய்ய வேண்டும் என கண்டறியபட்டதாகவும், சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் மற்றும் குழிகளுக்கு தேவையான ஆழத்தில் தோண்டி அதற்காக தேவைப்படும் ஜல்லி கலவை மற்றும் சிமெண்ட் கான்கிரீட் கலவை குளிர்ந்த தார் போன்றவற்றை கலந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பணிகளை மேற்கொள்வதற்காக 250 மெட்ரிக் டன் குளிர்ந்ததார் கலவை கை பிடிப்பில் உள்ளதாகவும், மேலும் 250 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிகளை தொடங்குவதால் பொதுமக்களுக்கு மற்றும் வாகனங்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் செய்து முடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது.
மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் துணை ஆய்வாளர்கள், வட்டார துணை ஆய்வாளர்கள், தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், இதற்கு தொடர்புடைய மண்டலங்களில் உள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட சாலைகளை மேற்கொண்டு வரும் பொழுது அவர்கள் பழுது பார்க்கும் பணிகளை நேரடியாக கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றார்கள்.