மருத்துவமனை நிரம்பியதால் நோயாளிகளுடன் நூறு ஆம்புலன்சுகள் காத்திருக்கும் அவலம்!
கொரோனா இரண்டாம் அலை உலகை அச்சுறுத்தினாலும், அது இந்தியாவை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. காரணம் நாளுக்கு நாள் அனைத்து மாநிலங்களிலும், தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களில் 10 ஆயிரம், 13 ஆயிரம் என உயர்ந்து நேற்று 18 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, கேரளாவில் நேற்று 7 ஆயிரத்து 500 பேருக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே நிலை அனைத்து மாநிலங்களிலும் இருப்பதால், பொதுமுடக்கம் விதிப்பதில் விருப்பமில்லை எனக்கூறிக்கொண்டே முதலமைச்சர்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் இன்று இரவு 8 மணி முதல் அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குஜராத்திலும் தொற்று வேகமாக பரவி வருவதால், அங்கு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால், சுடுகாடுகளில் இடம் இல்லாததால் திறந்தவெளியில் சடலங்களை எரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக நேற்று பெரும்பாலான ஊடகங்களில் செய்தி வெளியாயின.
இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில், படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதால், புதிதாக அழைத்து வரப்படும் நோயாளிகளுக்கு இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அகமதாபாத் மருத்துவமனைக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஊர்திகள் நோயாளிகளுடன் காத்திருக்கின்றன.
இந்த நிலை, வரும் நாட்களில் பெரும்பாலான மருத்தவமனைகளிலும் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கையாக அனைத்து மாநிலங்களும் சிகிச்சை நடுவங்களை அதிகப்படுத்தி தயார் படுத்த வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.