மறுவாக்குப் பதிவை புறக்கணித்து கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்! கர்நாடகத்தில் நடந்த சம்பவம்!!
கர்நாடக மாநிலத்தில் மறுவாக்குப் பதிவையும் புறக்கணித்து வீடுகளை பூட்டிவிட்டு மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி 14 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது சாம்ராஜ் மக்களவைத் தொகுதியில் இண்டிகநத்தா, துளசி கரை, மென்தெரா, தேக்கனே ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
இண்டிகநத்தா, துளசி கரை, மென்தெரா, தேக்கனே ஆகிய கிராமங்களில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என்பதால் மக்கள் தேர்தலை புறக்கணித்தனர் என்று கூறப்படுகின்றது. இதையடுத்து காவல் துறையினர் மற்றும் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடத்தியதால் இண்டிகநத்தா கிராமத்தில் மட்டும் வெறும் 9 பேர் மட்டும் வாக்களித்தனர்.
இதையடுத்து அந்த 9 பேர் வாக்களித்த நிலையில் கிராம மக்கள் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து ஆத்திரத்துடன் கிராம மக்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கினர். வாக்குச் சாவடி மையத்திற்குள் புகுந்து மின்னணு இயந்திரங்களை நொறுக்கிய குற்றத்திற்க்காக காவல் துறையினர் 33 பேரை கைது செய்தது.
அதன் பின்னர் இண்டிகநத்தா கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டு மறுவாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மறுவாக்குப்பதிவையும் கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது அந்த கிராம மக்கள் அனைவரும் காவல் துறையினர் கைது செய்த 33 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி கிராம மக்கள் அனைவரும் வீடுகளை பூட்டிவிட்டு தற்பொழுது கிராமங்களை விட்டு வெளியேறி உள்ளனர். இதனால் கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ் மக்களவை தொகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது.