கஞ்சா பொட்டலத்துடன் முதல்வரை சந்திக்க வந்த பாஜக நிர்வாகியால் பரபரப்பு..!!
தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்தாலும், பிற மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருவதால் இன்னும் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளன. மேலும், தேர்தல் கட்டுப்பாடுகள் காரணமாக புதிய திட்டங்களை அறிவிக்கவோ செயல்படுத்தவோ முடியாத நிலை தான் நீடிக்கிறது. இதனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்க தன் குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ளார்.
முன்னதாக மதுரை விமான நிலையத்தில் வைத்து தமிழக பாஜக ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முயன்றுள்ளார். அப்போது அவர் கையில் கஞ்சா பொட்டலம் இருந்ததால், போலீசார் அவரை சுற்றி வைத்து வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர். அப்போது தான் சங்கர பாண்டி மனு கொடுக்க வந்தது தெரிந்தது.
அதன்படி அவர் கையில் வைத்திருந்த மனுவில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தில் உள்ளன. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கூட தமிழகத்தில் மிக எளிதாக கிடைக்கிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்கள் சிறார்கள் என அனைவரும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.
போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் சட்ட விரோத செயல்களும் குற்ற செயல்களும் அதிகரித்து வருகிறது. இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே தமிழக மக்கள் நலன் கருதி விரைந்து நடவடிக்கை எடுத்து போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.