ஒமிக்ரானை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை !!அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!!
நாட்டில் கொரோனா தொற்று குறைந்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனாவின் உருமாறிய வைரஸான ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய நிலையில் தற்போது இது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் இதுவரை இந்த ஒமிக்ரான் தொற்று 19 மாநிலங்களில் பரவி இருப்பதாகவும் இதனால் 578 பேர் பாதித்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 142 பேரும், மகாராஷ்ட்ராவில் 141 பேரும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்திலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவத் தொடங்கி இருப்பதால் அதன் தீவிரத்தை கட்டுப்படுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் இதுதொடர்பாக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி உள்ளது. அதில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளை நடத்த அரசு பரிசீலனை செய்யவும், திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய திரையரங்குகள், பொழுது போக்கு மையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அதற்கு இப்போதே ஒருசில கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளனர்.
மேலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலம் ஒமிக்ரான் தொற்று தமிழகத்தில் பரவி வருவதால் இதனை கட்டுப்படுத்த உடனடியாக சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவும், தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி இதுவரையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கவும், கடைகள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இப்போதைக்கு இரவு நேர ஊரடங்கு அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.