ஒரே இடத்தில் முன்னாள் முதல்வர் மற்றும் சசிகலா! தொண்டர்களின் ஓயாத அலை!
நீண்ட காலமாக திமுகவின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன் அவர்கள், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடையவில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கிடையேயும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் வலைதள பக்கத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கழக அவைத் தலைவர் மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பாக வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதுசூதனின் உடல்நலம் குறித்து அதிமுகவினரின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான, மேலும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.
இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி வி.கே. சசிகலா திடீரென மதுசூதனன் உடல் நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஒரே இடத்தில், ஒரே மருத்துவமனையில், தற்போது சசிகலா மற்றும் எடப்பாடியார் இருவரும் இருப்பதால் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் ஒரு வித பரபரப்பு ஏற்பட்டுள்ளது.