காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் திருவிழா உற்சவத்தின் நிறைவு நாள்!! ஊஞ்சல் சேவை உற்சவத்தில் காட்சி அளித்த ஏகாம்பரநாதர் ஏலவார்க் குழலி அம்மன்!!

0
186
#image_title

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் திருவிழா உற்சவத்தின் நிறைவு நாள்!! ஊஞ்சல் சேவை உற்சவத்தில் காட்சி அளித்த ஏகாம்பரநாதர் ஏலவார்க் குழலி அம்மன்!!

நிறைவு நாள் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

பஞ்ச பூத ஸ்தலங்களில் பிரித்வி எனும் மண் ஸ்தலமாக விளங்கும், மூவாயிரம் ஆண்டுகள் பழமையான, உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி இன்றுடன் 14 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நாள்தோறும் காலை,மாலை என இரு வேளைகளிலும் பல்வேறு விதமான வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் முக்கிய விழாவான வெள்ளித்தேர் உற்சவம் கடந்த 31ஆம் தேதியும், ஸ்தல புராணத்தை விளக்கும் வெள்ளி மாவடி சேவை உற்சவம் 3-ம் தேதியும், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் 4-ம் தேதியும் நடைபெற்று முடிந்தது.

இதைத்தொடர்ந்து பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவத்தின் கடைசி நாளான இன்று கோவில் கருவறை முன்பு வண்ண வண்ண மலர்களால் அமைக்கப்பட்ட பூப்பந்தலில், பச்சை பட்டு உடுத்தி, பஞ்சவர்ண மலர் மாலைகள், திருவாரபரணங்கள் அணிந்த, ஏலவார் குழலி அம்மனும், ஏகாம்பரநாதர் சுவாமியும் எழுந்தருளி ஊஞ்சல் சேவை கண்டருளினார்கள்.

பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஊஞ்சல் சேவையில் ஏகாம்பரநாதர் ஏலவார் குழலி அம்மனுக்கும் வெண்சாமரம் வீசி,மகா தீபாரதனை காட்டப்பட்டதை தொடர்ந்து பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் நிறைவடைந்தது.

ஏகாம்பரநாதர் ஏலவார்க் குழலி ஊஞ்சல் சேவை உற்சவத்தில் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.