சீர் வரிசை தட்டில் இடம் பிடித்த தக்காளி! பெண்வீட்டார் பெரிய இடம் போலயே!!
வேலூர் மாவட்டத்தில் ஆடி மாத சீர்வரிசையான மாம்பழம் இனிப்பு பலகாரங்களுடன் சேர்த்து சீர் வரிசை தட்டில் தக்காளியையும் வைத்து பெண் வீட்டார் அசத்தியுள்ளனர்.
தற்போது கடந்த சில வாரங்களாக தங்கத்திற்கு நிகராக தக்காளி பார்க்கப்படுகிறது. தக்காளி தமிழகத்தில் தற்போது கிலோ 100 ரூநாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு ஆடி மாதம் சீர்வரிசை தட்டில் தக்காளியை வத்து சீராக பெண் வீட்டார் கொடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கே.வி குப்பத்தை சேர்ந்தவர் கனிஷ் குமார். இவருக்கும் பள்ளிகொண்டாவை சேர்ந்த லீலா பிரியா என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
புதிதாக திருமணமாகி ஒரு வருடத்திற்கு உள்ளான மணமக்களில் மணப்பெண்ணை மட்டும் தாய்வீட்டுக்கு அழைத்துச் செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது. அப்போது மணமகள் வீட்டார் மணமகன் வீட்டுக்கு சீர்வரிசை கொடுப்பதும் வழக்கமாக இருந்து வருகின்றது.
அதாவது தமிழகத்தில் ஆடி மாதம் முடியும் வரை புதிதாக திருமணமான மணப்பெண் தாய் வீட்டில் இருக்க வேண்டும். பிறகு பெண் வீட்டார் ஒரு நல்ல நாள் பார்த்து அந்த பெண்ணை கணவன் வீட்டுக்கு அனுப்பி வைப்பர். அதன்படி லீலா பிரியா அவர்களின் பெற்றோர் சீர் வரிசை வைத்து மணமகள் லீலா பிரியாவை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் வரவேண்டும் என்று எண்ணினர்.
அந்த வகையில் 25 வகையான சீர் வரிசை தட்டுகளை வைத்து லீலா பிரியாவை பெண் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அதாவது தேங்காய், மாம்பழம், திராட்சை, இனிப்பு வகைகளுடன் தற்போது விலையுயர்ந்த தக்காளியையும் சீராக வைத்தனர்.
கடந்த சில நாட்களாக தக்காளி கிலோ 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் தக்காளியையும் சீர்வரிசையில் வைத்து மணமகள் வீட்டார் கொண்டு வந்தனர். தக்காளி சமையலுக்கு பயன்படும் என்ற காரணத்தால் மணமகன் வீட்டார் அதை ஏற்றுக் கொண்டனர். உயர்ந்த மதிப்பு கொண்ட பழங்களின் வரிசையில் விலை உயர்ந்த தக்காளி பழத்தையும் சீராக வைத்தது அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.