Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

#image_title

திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் திருவிழாக்களில் தொடரும் சோக நிகழ்ச்சிகளுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை செய்தியில், கடந்த 2022-ஆம் ஆண்டு, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 2 பேர் மரணமடைந்த சம்பவத்தை 2022-ஆம் ஆண்டு சட்டமன்றத் தொடரில் குறிப்பிட்டுப் பேசினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, 5.5.2023 அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியில், முற்றிலுமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக திட்டமிடாத காரணத்தினாலும் 3 பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்ததாகவும், ஒரு பக்தர் கூட்ட நெரிசலில் இறந்ததாகவும், மற்றொரு இளைஞர் கோவில் மண்டப வாசலின் அருகே கொலை செய்யப்பட்ட துயரச் சம்பவங்கள் நடந்ததை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன் என்று கூறியுள்ளார்.
 செயலற்ற இந்த விடியா திமுக அரசிற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், மேலும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் உச்சமாக, மதுரை சித்திரை திருவிழாவில் பட்டாக் கத்தியுடன் இளைஞர்கள் நடனமாடிய காட்சிகள் இன்றுகூட ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
பட்டாக் கத்தியுடன் இருந்த இளைஞர்கள் சுதந்திரமாக உலா வந்ததைக் கண்டு பக்தர்கள் மிகவும் அச்சமடைந்தனர் என்றும், இவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததா என்றும் தெரியவில்லை. இந்நிகழ்வுகளைப் பார்க்கும்போது, தமிழகத்தில் உளவுத்துறை செயல்படுகிறதா என்ற சந்தேகமும், காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதோ என்ற சந்தேகமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த அரசு இனியாவது விழித்துகொண்டு,  லட்சக்கணக்கில் மக்கள் கூடும் கோயில் திருவிழாக்களின்போது, தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நிகழாவண்ணம் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நிர்வாகத் திறமையற்ற இந்த விடியா அரசை வலியுறுத்துகின்றேன் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள்  தெரிவித்துள்ளார்.
Exit mobile version