Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேர்தல் பிரச்சாரத்தில் திடீரென வந்த ஜெயலலிதா..! – அதிர்ச்சியில் தொண்டர்கள்

சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் திடீரென ஜெயலலிதா தோற்றத்தில் தோன்றிய பெண் ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தர்.

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் கசாலி போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கசாலிக்கு ஆதரவாக நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். ஐஸ்ஹவுஸ் பகுதியில் முதலமைச்சர் பரப்புரை மேற்கொள்ள மேடை அமைக்கப்பட்ட தொண்டர்கள் காத்திருந்தனர். முதலமைச்சர் வரும்வரை அனைவரும் காத்திருக்கவும், மக்களின் கவனம் திசை திரும்பாமல் இருக்கவும் மேடை நாடக கலைஞர்களின் ஆட்டம்,பாட்டம் என கலைக்கட்டியது.

அப்பொழுது திடீரென கூட்டத்தில் இருந்து மேடை ஏறிய பெண் ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பச்சை நிற சேலை அணிந்திருந்த அந்த பெண் பார்ப்பதற்கு அச்சு அசலாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போன்றே தோற்றமளித்தார். அவரை பார்த்ததும் தொண்டர்கள் ஆரவாரம் செய்ய ” மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்” என கம்பீரமான ஜெயலலிதா குரல் ஒலிக்கப்பட்டது. அந்த குரலுக்கு ஏற்ப ஜெயலலிதாவின் அசைவுகளை மேடையில் இருந்த பெண் அளித்தார்.

சிறிது நேரத்தில் எம்ஜிஆர் வேடத்தில் ஒருவர் மேடை ஏற ஜெயலலிதா, எம்ஜிஆர் என இருவர் வேடத்திலும் அங்கிருந்த நாடக கலைஞர்கள் தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.

Exit mobile version