பிரதமர் மோடியின் ரோடு ஷோ ஃப்ளாப் எதிரொலி.. அமித்ஷாவின் ரோடு ஷோவும் ரத்து!!
பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி தோல்வியுற்றதாக கூறப்படும் நிலையில், காரைக்குடியில் நடைபெறவிருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் 8 நாட்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தேசிய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை நெல்லையில் பிரச்சாரம் செய்கிறார். அதேபோல பிரதமர் மோடியும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
பிரச்சாரத்தின் ஒருபகுதியாக, சென்னையில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பிரதமர் மோடியின் இந்த ரோடு ஷோவுக்கு எதிர்பார்த்த கூட்டம் வராததால், முன்னதாகவே முடிவுற்றதாக கூறப்பட்டது. சமூக வலைதளங்களில்கூட, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பிரதமர் மோடியின் ரோடு ஷோ பற்றி கிண்டலாக பதிவிட்டிருந்தனர்.
மேலும் ஒரு வீடியோ ஒன்றும் வைரலானது. அதில் சாலையோரம் நின்றிருந்த பாஜக தொண்டர்கள், “ஆப் கி பார்.. சாக்கோ பார்” என முழக்கமிட்டனர். இந்தியில் என்ன சொல்வது என்று தெரியாமலேயே சாக்கோ பார் என்ற ஐஸ்கிரீம் வகையை குறிப்பிட்டு பாஜக தொண்டர்கள் முழக்கமிட்டதாக, நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இதற்கிடையே பிரதமர் மோடியை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய உள்ளார். மதுரையில் நாளையும், அதன்பின்னர் காரைக்குடியிலும் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருந்தார். சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து இந்த ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ரோடு ஷோ தோல்வி அடைந்ததன் காரணமாகவே அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதன் 525 கோடி ரூபாய் மோசடி செய்ததாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்திருந்தது. இதனால் அவருக்கு ஆதரவாக ரோடு ஷோ நடத்துவதற்கு அமித்ஷா மறுப்பு தெரிவித்தாரா? என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் மதுரையில் நடக்கும் அமித்ஷாவின் பிரச்சாரம், ரோடு ஷோ உள்ளிட்டவை ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.