கடந்த 24 மணி நேரத்தில் தமிழக போலீசாரின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.
குறிப்பாக சென்னையில் மெத்தாம்பிட்டமைன் என்ற போதை பொருளை பதுக்கி வைத்திருந்த ராகுல் மற்றும் காதர் மைதீன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போதை பொருள் வைத்திருந்த இந்த வழக்கில் கைதான ராகுல் என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என்று போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினரான ராகுல் வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தங்க சங்கிலி பறித்த குற்றவாளிகளை 15 மணிநேரத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி போலீஸ்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி ஆசிரியையிடம் நான்கரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு தனிப்படை அமைத்து வாகனத் தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருவர் போலீசாரிடம் இருந்து தப்பி, அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் புகுந்தனர்.
கரும்பு தோட்டத்தை சுற்றி வளைத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், பள்ளி ஆசிரியரிடம் தங்க சங்கிலி பறித்தது தெரியவந்தது.
இதனை அடுத்து அபிமன்யம் (வயது 23), அருள்ஜோதி (வயது 22) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வசமாக சிக்கிய பைக் திருடர்கள்!
சென்னை : மதுரவாயல், கோயம்பேடு, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை, கள்ளச் சாவி மூலம் திருடிய 3 பேரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐயப்பன் தாங்கள் பகுதியை சேர்ந்த தங்கராஜ், ஸ்ரீநாத் மற்றும் தீபன் ஆகியோரிடம் இருந்து 12 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.