Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

1.10.2020 இன்றைய நாள் புரட்டாசி பௌர்ணமிக்கு கதை உண்டு!

புரட்டாசி மாதம் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது உன்னத வாழ்வை அருளும் என்பது கருத்து. அதே வேளையில் புரட்டாசியில் வரும் பவுர்ணமி நாளில் சிவபெருமானை வழிபடுவது பலவித பாவங்களைப் போக்கும் என்கிறது ஒரு புராணக் கதை. அதைப் பற்றிப் பார்க்கலாம்.

 

கதை:

 

கிருச்சமதர் என்ற முனிவர் விநாயகப் பெருமானின் பக்தர் ஆவார். விநாயகரை தரிசித்து அருள் பெற வேண்டும் என்பதனால் கடும் தவம் புரிந்து விநாயகரையும் தரிசித்தார். விநாயகப் பெருமான் எழுந்த பல்வேறு வரங்களை வாங்கிக் கொண்டார்.

 

அதில் ஒன்று. சிவபெருமானைத் தவிர வேறு எவராலும் அழிக்க முடியாத ஒரு மகனை, தன்னுடைய யோக சக்தியால் பெற்றது. அவ்வாறு கிருச்சமதர் முனிவர் பெற்ற மகனின் பெயர் ‘பலி’ என்பதாகும்.

தன்னுடைய தந்தையைப் போலவே, பலியும் விநாயகப்பெருமானிடம் அளவு கடந்த பக்தியைச் செலுத்தி வந்தான். விநாயகரை நோக்கி தவம் இருந்த பலி அவரிடம், ‘மூன்று உலகங்களையும் அடக்கியாளும் வல்லமையை தனக்கு தந்தருள வேண்டும்’ என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றான். அந்த வரத்தை அவனுக்கு அளித்த விநாயகர், மேலும் பொன், வெள்ளி, இரும்பால் ஆன மூன்று உலோக கோட்டையையும் கொடுத்து அருள்புரிந்தார்.

வரங்களை அளித்த விநாயகர், பலியை எச்சரிக்கை செய்யவும் தவறவில்லை. ‘நான் வழங்கிய வரங்களைக் கொண்டு, நீ தவறான பாதையில் சென்றால், சிவபெருமானின் திருக்கரத்தில் உள்ள கணை ஒன்றினால் உன்னுடைய கோட்டைகள் அழியும். நீ என்னுடைய பக்தன் என்பதால், சிவபெருமானால் சம்ஹாரம் செய்யப்படுவதாலும் உனக்கு வீடுபேறு உண்டாகும்’ என்று அருளினார்.

விநாயகரிடம் இருந்து வரங்களைப் பெற்ற பலி, மூன்று உலகங்களையும் தன் வசப்படுத்தினான். தேவர்களையும், முனிவர்களையும் துன்பப்படுத்தினான். அவனின் வதையால் பயந்து போன தேவர்களும், முனிவர்களும் ஓடி ஒளிந்தனர். ஒரு சிலர் நாரதரிடம் சென்று முறையிட்டனர். அவரின் வழிகாட்டுதலின் படி விநாயகரை வழிபட்டுக் கொண்டு, சிவபெருமானிடம் சென்று தங்களைக் காத்தருள வேண்டினர்.

சிவபெருமான், திரிபுரனுடன் போரிட்டால்தானே முனிவர்களைக் காப்பாற்ற முடியும். எனவே போருக்கு வழி செய்யும் வேலையை விநாயகரே மேற்கொண்டார். அந்தணர் வேடம் பூண்ட விநாயகர், திரிபுரனிடம் சென்று ‘திருக்கயிலையில் இருக்கும் சிந்தாமணி விநாயகரின் திருவுருவத்தை எனக்கு எடுத்துத் தர வேண்டும்’ என்று கேட்டார். அந்தணர் விநாயகரின் பக்தன் என்பதால், திரிபுரன் அதற்குச் சம்மதித்தான்.

 

பின்னர் தன்னுடைய தூதர்களை அனுப்பி, சிவபெருமானிடம் இருந்து சிந்தாமணி விநாயகர் உருவத்தைப் பெற்று வரும்படி அனுப்பினான். ஆனால் சிவபெருமான், விநாயகர் உருவத்தை தர மறுத்ததுடன், தன்னுடன் போரிட்டு அதை எடுத்துச் செல்லும்படி கூறினார். இதை அறிந்ததும் தன் படைகளுடன் சிவபெருமானிடம் போரிட வந்தான் திரிபுரன். அப்போது சிவபெருமான் தன்னுடைய திருக்கரத்தில் இருந்த கணை ஒன்றைக் கொண்டு அவனது மூன்று கோட்டைகளையும் அழித்தார். அந்தக் கணை சிவபெருமானின் கையை வந்தடையும் முன்பாகவே, திரிபுரன் சிவபெருமானின் திருவடியில் கலந்து வீடுபேறு பெற்றான்.

அவ்வாறு திரிபுரன் வீடுபேறு பெற்ற தினம், புரட்டாசி மாத பவுர்ணமி நாள் ஆகும். இந்த நாளில் ஈசனுக்கு விழா நடத்துவதாலும், அவரவர் ஆற்றலுக்கு ஏற்ப வழிபாடு செய்வதாலும், துன்பம் என்பதே நெருங்காது என்பது ஐதீகம். புரட்டாசி மாத பவுர்ணமி நாளின் காலையில் சிவபெருமானை வழிபட்டால், முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். பகல் வேளையில் ஈசனை வழிபாடு செய்தால், முற்பிறவி மட்டுமின்றி இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் கூட விலகும். மாலை வேளை… அதாவது பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் அனைத்து பிறவிகளிலும் செய்த அனைத்து பாவங்கள் நீங்கும் என்பது புரட்டாசி மாத பவுர்ணமி தின வழிபாட்டின் சிறப்பாகும்.

.

 

Exit mobile version