தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படும் டாஸ்மாக் (TASMAC) நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில், அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இந்த சோதனைகள் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான உற்பத்தி நிறுவனங்கள், மற்றும் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனங்கள் உள்ளிட்ட மொத்தம் 25 இடங்களில் நடைபெற்றன.
இந்தச் சூழலில், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பாக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அமலாக்கத்துறை சோதனைகள் மற்றும் அதற்கான பின்னணி தொடர்பாக மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. அமலாக்கத்துறை நடத்திய சோதனை குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அண்ணா அறிவாலயத்தில் பேட்டி அளித்தார்.
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாற்று கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களை பழிவாங்க மாட்டோம் என பாஜகவினர் வாக்களித்தனர். ஆனால், தற்போது பாஜக ஆளாத மாநிலங்களில் பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை (ED) தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகிறது. இது முற்றிலும் அரசியல் சூழ்ச்சி மட்டுமே.
மாற்று கட்சியினர் ஆட்சி செய்யும் மாநிலங்களை குறிவைத்து, அரசியல் எதிரிகளை துன்புறுத்தும் விதமாக அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகின்றது. பல்வேறு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குகள் போடப்படுகின்றன. ஆனால், அதே வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஜகவில் சேரும்போது அவர்கள் மீது எந்த விசாரணையும் நடைபெறாமல் விடப்படுகிறார்கள். இதன் மூலம், அமலாக்கத்துறை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்பது வெளிப்படையாகிறது.
அமலாக்கத்துறையில் பணிபுரிபவர்களில் யாரும் புனிதர்கள் அல்ல. சமீபத்தில், அந்தத் துறையின் அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அதனால், இந்த அமைப்பு உண்மையாக சட்டத்தை அமல்படுத்துகிறதா அல்லது பாஜகவின் அரசியல் சாதனைக்காக செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது. அதற்கான ஆதாரங்கள் உள்ளதா? இல்லை என்றால், உண்மையில் இது அரசியல் வேட்டையா? டாஸ்மாக் மதுபான விற்பனை குறித்து சிலர் அவதூறாக பேசுகிறார்கள். இளம் விதவைகள் அதிகரிக்க காரணம் மதுபான விற்பனை என்ற தவறான தகவலை பரப்புகிறார்கள். இது உண்மையல்ல. மதுபானம் ஒழிக்கும் நடவடிக்கைகள் அரசு மூலம் தொடர்கின்றன.
அனுமதியின்றி போராட்டம் நடத்தும் குழுக்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்வது தவறு இல்லை. முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடலாம் என்று நினைக்கும் அண்ணாமலை இதை முயற்சித்து பார்ப்பாரா? அது நடக்குமா என்பதை பொது மக்கள் பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. எந்தவித அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. மத்திய அரசும், அதன் அமைப்புகளும் சட்டத்திற்குள் நடந்து கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்தார்.