பலவிதமான நலத்திட்டங்களை அறிவித்து வரும் தமிழக அரசு தற்பொழுது மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆராய்ச்சிகள் படிப்புகளுக்கு 10000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி உள்ளது.
திமுக தலைமையில் தமிழக அரசு பதவியேற்றுக் கொண்ட பிறகு மக்களுக்காக பல நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழ் புதல்வன், விடியல் பயணம் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்று பல நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் தற்பொழுது உயர் கல்வி பயிலும் மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளை படிக்க தமிழக அரசு 10000 நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தமிழக அரசு 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலமாக இளநிலை மற்றும் முதுகலை பொறியியல், அறிவியல் படிப்புகள், முதுகலை தொழில் படிப்புகள் ஆகிய பிரிவுகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிதி பயன்படுத்தப்படுகின்றது.
மாணவர்களின் புதுமையான ஆராய்ச்சித் திட்டங்களை வேளாண்மை, வேதியியல், உயிரியல் போன்ற முக்கியமான பிரிவுகளில் பயன்படுத்தி செயல்படுத்த மாணவர்களுக்கு 10000 ரூபாய் வரை நிதியுதவியாக வழங்கப்படுகின்றது. இந்த செயல் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் வாயிலாக செயல்படுத்தப்படும்.
அவ்வாறு மாணவர்களிடம் இருந்து பெறப்படும் திட்டங்கள் அனைத்தும் தொழில்நுட்ப வல்லுநர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் பின்னர் மாணவர்கள் அளித்த ஆராய்ச்சித் திட்டங்களில் சிறந்த ஆராய்ச்சி திட்டம் தேர்ந்தெடுக்கப்படுகின்றது. இந்த திட்டங்களில் சமூக பிரச்சனைக்கு தீர்வு அளிக்கக் கூடிய வகையில் இருந்தால் அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மாணவர்களின் இந்த கண்டுபிடிப்புகள், யோசனைகள் ஆகியவை அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். பின்னர் இவை அனைத்தும் காப்புரிமை தகவல் மையம் மூலமாக பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு மாணவர்கள் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி திட்டங்களை இணையதளத்தில் வெளியீடு செய்ய முடியும். இந்த நிதியுதவி திட்டமானது மாணவர்களை அறிவியல் பக்கம் இழுக்கின்றது. இவ்வாறு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 1010 மாணவர்களின் ஆராய்ச்சித் திட்டங்கள் www.tanscst.tn.gov.in என்ற இணையதளத்தில் பதற்றம் செய்யப்பட்டுள்ளது.