கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி டெல்லியில் உள்ள புராரி பகுதியில் ஒரு வீட்டில் 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. அதில் 11 பேருமே தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
கண், வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் இருந்தனர். இதில் 7 பெண்களும், 4 ஆண்கள் என ஒரு பெரிய குடும்பமே பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் இந்தியா மட்டுமன்றி உலகளவிலும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனை அடுத்து, இது கொலையா அல்லது தற்கொலையா என பல கோணங்களில் விசாரணை நடைபெற்றது. வீட்டின் வெளியே நீட்டிக் கொண்டிருந்த 11 குழாய்கள் மற்றும் கடிதம். அந்த கடிதத்தில் குறிப்பிட்ட வாழ்க்கையில் மறுவாழ்வு, அமானுஷ்யம் மற்றும் மறுபிறவி என அந்த வீட்டில் அனைத்துமே மர்மமாகவும், திகிலாகவும் இருந்தது.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட வீடியோ காட்சிகளிலும், அந்த வீட்டுக்குள் யாரும் போகவுமில்லை, அங்கிருந்து யாரும் வெளியே வரவும் இல்லை எனத் தெரிந்தது. அதனால், இது ஒரு தற்கொலை தான் என முடிவுக்கு வந்த போலீசார், குடும்பத்தினர் அனைவருமே தற்கொலை செய்து கொள்ள என்ன காரணமாக இருக்கலாம் என விசாரணையின் கோணத்தை திருப்பினர்.
அந்த விசாரணையில் அவர்கள் எந்த மன அழுத்தத்தின் காரணமாகவும் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கடந்த 2007ஆம் ஆண்டு இறந்த அந்த குடும்பத்தின் தலைவரான போபால் சிங்கின் ஆவி அதே குடும்பத்தில் இருப்பதாகவும், லலித் என்பவருடன் பேசியதாக அந்த குடும்பத்தினர் நம்பியுள்ளனர்.
குடும்பம் சிறப்பாக இருக்க சில அமானுஷ்ய வேலைகளை செய்ய வேண்டும் என போபாலின் ஆன்மா கேட்டுக்கொண்டதாகவும், அதன்படி, அந்த குடும்பத்தினர் சில அமானுஷ்ய வேளைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் இறுதிகட்டமாகவே அனைவரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்துள்ளனர்.
இருந்து விட்டாலும் மீண்டும் பூமியில் உயிர் பெறலாம் என்ற மூடநம்பிக்கையை முழுமையாக நம்பிய அவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அதில் ஒரு பகுதியாகவே கண்ணையும், வாயையும் கட்டிக் கொண்டு அவர்கள் அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அப்படி செய்தால் மோட்சம் அடையலாம் என்றும் அவர்கள் நம்பியுள்ளனர். அதன்படி, இந்த வழக்கின் இறுதி அறிக்கையில் இந்த மரணங்களில் யாருடைய சூழ்ச்சியும் இல்லை இது தற்கொலை தான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.