Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆக்சிஜன் பற்றாக்குறையால் செங்கல்பட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட சோகம்!

செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 நோய் தொற்று உள்ளவர்கள் அடுத்தடுத்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது என்று உறவினர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் தான் அதிகமான அளவில் நோய் தொற்று பாதிப்பு இருக்கிறது. ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு இருக்கின்ற சூழ்நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. வடமாநிலங்களில் இதே போன்ற சம்பவங்கள் நடந்து வந்தது. அதே சம்பவம் தற்போது தமிழ்நாட்டிலும் நடந்திருப்பது சோகத்தை உண்டாக்கியிருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவமனையில் பல்லாவரம், தாம்பரம், காட்டாங்குளத்தூர் போன்ற பகுதிகளைச் சார்ந்த கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான நோய் தொற்று உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இந்த சூழ்நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், அடுத்தடுத்து 4 நோயாளிகள் பலியாகி இருக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து ஆக்சிஜன் சிலிண்டர் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, நோயாளிகள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று உறவினர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இதுதொடர்பாக தகவல் தெரிந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். மருத்துவமனையில் ஆக்சிஜன் கையிருப்பில் இருப்பதாகவும், இந்த உயிரிழப்புகள் எதிர்பாராதவிதமாக உண்டாகி இருக்கிறது என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். கடந்த மாதம் வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 7 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version