ஈரோட்டில் நள்ளிரவில் துணிகரம் நில அளவையாளர் வீட்டில் 11 பவுன் – ரூ.70 ஆயிரம் பணம் திருடி மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிக் யூனிட் பகுதி- 3 சேர்ந்தவர் தமிழரசு. பால் வண்டி டிரைவராக உள்ளார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு கவின்ராஜ் என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். கவின்ராஜ் கோத்தகிரியில் நில அளவையாளராக பயிற்சி பெற்று வருகிறார்.
முத்தம்பாளையத்தில் கவின்ராஜ் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கீழ்தளத்தில் வீட்டின் உரிமையாளரும், முதல் மாடியில் கவின்ராஜ் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள ஹாலில் கவின் ராஜ், தமிழ் அரசு, அபிராமி ஆகியோர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
கடும் வெயிலின் தாக்கம் காரணமாக காற்றுக்காக சுமதி மேல் மொட்டை மாடிக்கு தூக்க சென்றார். அவர் செல்லும் போது கதவை தாழ்படாமல் திறந்து வைத்து சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு கவின் ராஜ் வீட்டிற்குள் நுழைந்தனர்.
வீட்டின் அறையில் உள்ள பீரோ அருகே சாவி இருந்தது. சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 11 பவுன் நகை, ரூ. 70 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். போகும்போது கவின்ராஜ் வீட்டில் இருந்த இரண்டு விலை உயர்ந்த ஸ்மார்ட் போனையும் திருடி கொண்டு சென்றனர்.
இன்று காலை கவின்ராஜ் எழுந்து பார்த்தபோது வீட்டில் பொருட்கள் சிதறி கிடப்பதை அதிர்ச்சி அடைந்தார். அப்போது பீரோல் திறந்து கிடப்பதைக் கண்டு பீரோவை பார்த்தபோது நகை பணம் கொள்ளை போயிருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கவின்ராஜ் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் வீராவும் வரவழைக்கப்பட்டது.
அது சிறிது தூரம் ஓடியது ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டில் ஆள் இருக்கும்போதே நடந்த இந்த துணிகர திருட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.