தனியார் நிறுவனங்களில் இனி 12 மணிநேர வேலை! சட்ட மசோதா தாக்கல்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்ட தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த நிலையில் கடைசி நாளான இன்று, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் விவாதம் நடைபெறவுள்ளது.
இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் கணேசன் வெளியிட உள்ளார். இதில் குறிப்பாக தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 12- மணி நேரமாக உயர்த்துவது தொடர்பாக சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே இந்த சட்டத்திற்கு இந்திய, மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
இந்த அறிவிப்பு குறித்து அமைச்சர் கணேசன் கூறுகையில், சில ஐடி நிறுவனங்கள் 12 மணி நேரம் வேலைக்கு சம்மதம் தெரிவித்ததால் இந்த சட்ட மசோதா கொண்டுவரப்படுகிறது. மற்றபடி தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் நேரம் 8 மணி நேரம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கொண்டுவரும் இந்த மசோதாவால் பல தனியார் ஊழியர்கள் 12 மணி நேரம் வேலை செய்வதை மறைமுகமாக கட்டாயமாக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் இந்த சட்ட மசோதாவிற்கு பல தனியார் நிறுவன ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்