சார் பதிவாளர் உள்ளிட்ட 12 பேர் கைது!! சிபிசிஐடி அதிரடிநடவடிக்கை!!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாரதி வீதியில் காமாட்சியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கென சொந்தமாக ரூபாய் 50 கோடி மதிப்பில் 64,000 சதுர அடியில் நிலம் ஒன்று உள்ளது.
அந்த நிலத்திற்கு சிலர் போலி ஆவணம் தயாரித்து மனைகளாக பிரித்து கடந்த 2021 ஆம் ஆண்டு விற்பனை செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக சிபிசிஐடி நடத்திய விசாரணையில் புதுச்சேரி முன்னாள் வி.ஏ.ஓ. உள்ளிட்ட 12 பேரை கோவில் நிலத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து விற்ற வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் நன்கு ஆய்வு செய்யமால் போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்ய உதவியாக இருந்த சார் பதிவாளரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 1995 ஆம் ஆண்டு உயில் என போலி ஆவணம் தயார் செய்து 2021 ஆம் ஆண்டு புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் நிலத்தை பதிவு செய்துள்ளனர்.
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம், கடந்த 1993 ஆம் ஆண்டு விழுப்புரம் ராமசாமி படையாட்சி மாவட்டமாகவும், கடலூர் வள்ளலார் மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டது.
அதன் பிறகு விழுப்புரம் மாவட்டம், கடலூர் மாவட்டம் என 1997 ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதுபோலவே பாண்டிச்சேரி என்ற பெயர் புதுச்சேரியாக 2006 ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது.
ஆனால் 1995 ஆம் ஆண்டு எழுதப்பட்டதாக கூறப்பட்ட போலி உயில் புதுச்சேரி என்றும், விழுப்புரம் மாவட்டம், கடலூர் மாவட்டம் என அச்சிட்டு பத்திரப் பதிவு செய்துள்ளனர். இது சம்மந்தமாக தொடங்கப்பட்ட ஆய்வின் மூலமாகவே சார் பதிவாளர் கைது செய்யப்பட்டார்.