செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை இந்த மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு!! மாவட்ட ஆட்சியர் அதிரடி!!
வருகின்ற செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்த மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷார் ஆட்சி செய்த போது அவர்களுக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக தனது ராணுவப் பணியை துறந்த வரும், பன்மொழி புலவருமான, இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் வருகின்ற செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.
அதைப்போலவே சுதந்திரப் போராட்ட வீரரும், ஆன்மீகவாதியுமான முத்துராமலிங்க தேவர் அவர்களின் நினைவு தினமும், பிறந்த நாளும் ஆன அக்டோபர் 30 என்பதால் கமுதியில் உள்ள பசும்பொன்னில் அவரது நினைவிடத்தில் வருகின்ற அக்டோபர் 30 அன்று ஆண்டுதோறும் குருபூஜை நடைபெறும்.
எனவே இந்த இரு நாட்களிலும் இந்த இரண்டு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் நினைவிடங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதால் இந்த சமயங்களில் அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை மக்கள் கொண்டாட தயாராகி வருவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பதாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.
இந்த தடை உத்தரவின் போது வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் அனுமதி இல்லாமல் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.