சாதாரண வார்டு மெம்பர் தொடங்கி ஒரு நாட்டின் முதல் குடிமகன் என்ற அந்தஸ்தில் இருக்கும் குடியரசு தலைவர் வரையில் அரசின் ஒவ்வொரு பதவியை ஏற்கும் போதும் அந்த பதவிக்கான பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும்.
அந்த வகையில் இன்று நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட திரௌபதி முர்மு அவர்கள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி தொடர்பாக தற்போது நாம் காணலாம்.
அரசின் ஒவ்வொரு பதவியை ஏற்றுக்கொள்ளும் போதும் அந்த பதவிக்கான பொறுப்புகளையும் கடமைகளையும் சரிவர செய்வேன் என்று அந்த பதவியில் அமர்பவர் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாட்டின் முதல் குடிமகனாக விளங்கும் குடியரசுத் தலைவர் பதவியேற்கும் போது எடுக்கப்படும் உறுதி மொழியில் என்னென்ன உறுதிமொழிகள் இருக்கும் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
ஆட்டின் 15 வது குடியரசு தலைவராக பொறுப்பேற்ற திரௌபதி முர்மு எடுத்துக்கொண்ட உறுதிமொழி வருமாறு, திரௌபதி முர்முவாகிய நான் கடவுளின் பெயரால் சத்தியம் செய்கிறேன்., இந்திய குடியரசுத் தலைவர் பதவியின் பணிகளை உண்மையாகவும், நேர்மையாகவும், நிறைவேற்றுவேன் எனவும், என்னால் முடிந்தவரை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை போற்றி உறுதிப்படுத்தவும், பாதுகாக்கவும், முயற்சி செய்வேன். இந்திய மக்களின் சேவை மற்றும் நல்வாழ்வுக்காக என்னை அர்ப்பணிப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 60ன் கீழ் ஒவ்வொரு ஜனாதிபதியும் ஜனாதிபதியாக செயல்படும் அல்லது ஜனாதிபதியின் பதவிகளை நிறைவேற்றும் ஒவ்வொரு நபரும் அவருடைய அலுவலகத்தில் நுழைவதற்கு முன்னர் இந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும்.
இந்திய தலைமை நீதிபதி முன்னிலையில், அல்லது அவர் இல்லாத நிலையில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி முன்னிலையில் இந்த உறுதிமொழியேற்பு நிகழ்வு நடைபெறும்.
வாய் வழி உறுதிமொழி ஏற்கப்பட்டவுடன் அரசு முத்திரையுடன் கூடிய உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திடப்பட்டு சமர்ப்பிக்கப்படும் அந்த நொடியிலிருந்தே அவர் குடியரசு தலைவர் பதவியிலிருப்பார். இன்று நாட்டின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன்னிலையில், திரௌபதி முர்மு நாட்டின் 15 வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.