வங்கிக் கணக்கை ஹேக் செய்து 2.61 கோடி கொள்ளை! 2 வெளிநாட்டவர் கைது!
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் கணக்கை ஹேக் செய்து கொள்ளையடித்த இரண்டு வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள பாரிமுனையில் கூட்டுறவு வங்கியின் தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து கடந்த நவம்பர் மாதம் 2.61 கோடி வங்கி கணக்கில் திடீரென காணாமல் போனது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி பணியாளர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் மிக தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.
விசாரணையில் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கீ லாக்கர் என்ற பெயரில் வங்கிக்கு ஒரு மெயில் வந்துள்ளது. அதை ஊழியர்கள் என்னவென்று திறந்து பார்த்துள்ளனர்.
அது ஹேக்கர்கள் அனுப்பிய மெயில் என்று தெரியாமல் வங்கி பணியாளர்கள் திறந்து பார்த்துள்ளனர். இதனால் வங்கியின் கணினி கட்டுப்பாடு முழுவதும் ஹேக்கர்களின் வசம் சென்றது. அதைத்தொடர்ந்து வங்கி கணக்கை ஹேக் செய்து அதிலிருந்து 2.61 கோடி கொள்ளை அடித்தனர். இதை அறிந்ததும் போலீசார் விசாரணையை தீவிரமாக முடிக்கி விட்டனர்.
இந்நிலையில் தமிழ்நாடு கூட்டுறவு சங்க வங்கிக் கணக்கை ஹேக் செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு நைஜீரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி உத்தம் நகரில் பதுங்கி இருந்த அவர்கள் இருவரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.