ராணுவ ரகசியத்தை இந்த நாட்டில் கூறியதால் 2 பேர் கைது !
ராஜஸ்தானின் பொக்ரானில் சேர்ந்த ஹபிபூர் ரஹ்மான் என்பவர் அங்குள்ள ராணுவ முகாமிலிருந்து ராணுவ ரகசியங்களை பெற்று, பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. க்கு விற்பதாக டெல்லி சிறப்பு போலீசாருக்கு உளவுத்துறை தகவல் வழங்கியது. குறிப்பாக ராணுவ முகாமில் பணியாற்றி வந்த ராணுவ வீரர்களிடம் இருந்து இந்த ரகசிய ஆவணங்களை பெற்று ஐஎஸ்ஐக்கு விற்பதும் தெரியவந்தது.
அதன்படி டெல்லி போலீசார் விரைந்து சென்று ஹபிபுர் ரஹ்மானை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதனை தொடர்ந்து அரசு ரகசியங்கள் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையின்போது அவர் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்து வரும் தனது உறவினர்களை, பார்க்க சென்றதாகவும் அங்கு சென்றபோது அங்குள்ள சிலரின் மூலம், இந்த உளவு பார்க்கும் நெட்வொர்க்கில் இணைந்ததாகவும் கூறியுள்ளார். இதற்க்கு பணத்தை ஹவாலா முறையில் பெற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
அதன்பேரில் இந்த உளவு பணிக்கு துணையாக இருந்த பரம்ஜித் சிங் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே அவர் பொக்ரான் ராணுவ முகாமில் பணியாற்றி வந்தவர். தற்போது ஆக்ரா கண்டோன்ட்மென்ட்டில் பணியாற்றி வருகிறார். அவர் மீதும் அரசு ரகசியங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பரம்ஜித் சிங் மற்றும் ரஹ்மான் இருவரும் சட்டவிரோதமாக செயல்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், பாகிஸ்தான் உளவுத்துறைக்கு அவர்கள் வழங்கிய ஆவணங்கள் வகைப்படுத்தப்பட்டன என்றும், ராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்த உளவு பணிக்காக பல்வேறு வங்கி கணக்குகள் பயன்படுத்தப்பட்டு வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணைகள் நடந்து வருகிறது. முன்னதாக ராணுவ முகாமில் காய்கறி விநியோகிப்பாளர் ஆக இருந்த ஹபிப் கான், 34 வயதான இவரையும் இதே குற்றச்சாட்டில் கடந்த 12ஆம் தேதி டெல்லி போலீசார் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக ராணுவ வீரர் உட்பட மேலும் 2 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பாதுகாப்பு படையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.