Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்பு விவகாரம்! ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய ஸ்ரீமதியின் இரு தோழிகள் பிடிபடுவார்களா உண்மையான குற்றவாளிகள்?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இருக்கின்ற கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சென்ற மாதம் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்தது. பள்ளியின் தரப்பில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆனால் பெற்றோர்களின் தரப்பில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து 4 நாட்கள் சாலை மறியலில் உறவினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், உள்ளிட்ட அனைவரும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஜூலை மாதம் 17ஆம் தேதி மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்த இந்த போராட்டம் கலவரமாக மாறி பள்ளி முற்றிலும் சேதப்படுத்தப்பட்டது அதோடு பள்ளி பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் பள்ளியில் பெரும்பாலான பொருட்கள் சூறையாடப்பட்டது. மாணவியின் உயிரிழப்பு குறித்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளியின் முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா, உள்ளிட்டோர் மீது தற்கொலை செய்ய தூண்டுதல், பாதுகாப்பில் இருப்பவருக்கு தொல்லை வழங்குதல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

இதற்கு நடுவே தங்களுடைய மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவருடைய பெற்றோர் தொடர்ந்து குற்றம் சாட்டை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலிருக்கின்ற நிலையில், மாணவியின் தாயார் ஸ்ரீமதியின் இறப்பு தொடர்பாக அடுத்தடுத்து கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவற்றில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் கையிலெடுத்தனர், அவர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு அந்த மாணவியின் உறவினர்கள், மாணவியின் சொந்த கிராமத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர் படித்த பள்ளி நிர்வாகத்தை சார்ந்தவர்கள் மாணவிக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளியிலிருக்கின்ற மற்ற ஆசிரியர்கள் ஊழியர்கள் என்று பலதரப்பட்ட நபர்களிடமும் தீவிரமான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் மாணவி ஸ்ரீமதியுடன் அதே பள்ளியில் படித்த அவருடைய தோழிகள் வழங்கும் வாக்குமூலம் தான் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படுகிறது. ஆகவே அந்த வாக்குமூலத்தினடிப்படையில் தான் மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்ற காரணத்தால், மாணவியின் தோழிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு சிபிசிஐடி காவல் துறையினர் முடிவு செய்து அதற்கான ஒப்புதலையும் நீதிமன்றத்திடம் பெற்றனர்.

ஆகவே நேற்று மாலை 4 மணியளவில் மாணவி ஸ்ரீமதியின் தோழிகள் 2 பேர் அவர்களுடைய பெற்றோர் அனுமதியுடன் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

அதன் பிறகு நீதிமன்றத்தின் கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி தங்களுடைய தோழி ஸ்ரீமதியின் மரணம் குறித்து சுமார் ஒன்றரை மணி நேரம் ரகசிய வாக்குமூலம் வழங்கினர்.

அவர்கள் இருவரும் வழங்கிய வாக்குமூலம் முழுவதையும் நீதிபதி புஷ்ப ராணி பதிவு செய்து கொண்டார் அதன் பின்னர் அந்த மாணவிகள் இருவரும் நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டு சென்றனர்.

Exit mobile version