கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு
ஜெயங்கொண்டம் – கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக முத்துவாஞ்சேரி பகுதியில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு.
இதனைத்தொடர்ந்து மருதையாற்றின் ஓரம் உள்ள கருவேல மரங்களை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள முத்துவாஞ்சேரி சாத்தம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 200 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள அந்த சித்திரை கார் பட்டம் நடவு நெல் வயல்கள் மற்றும் பருத்தி, சூரியகாந்தி பூ உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளதாவது, மருதையாற்றில் கரை தாழ்வாக உள்ளதால் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மருதையாற்றில் நீர் எதிர்த்து வந்து முத்துவாஞ்சேரி சாத்தம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் புகுந்ததால் பயிர்களை சேதம் அடைந்துள்ளது.
மருதையாற்று கரையை கடம்பூர் வரை அதாவது மருதையாற்றின் ஓரம் உள்ள கருவேல மரங்களை அகற்றி கரையை பலப்படுத்தினால் இதுபோன்ற சேதத்தினை தடுக்க முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பின் போது இந்த பகுதி வழியாக வெள்ளநீர் புகுந்து முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, அணைக்குடி, அறங்கோட்டை உள்ளிட்ட அருள்மொழி கிராமம் வரை பெரிய அளவில் விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்படுகிறது.
சென்ற ஆண்டு மழை காலங்களில் ஏற்பட்ட பாதிப்பின் போது அரசாங்கம் பயிர்களை கணக்கீடு செய்து சென்றதே தவிர விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை. தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சித்தரைக்கார் நடவு பட்டம் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
தற்போதாவது அரசு உரிய பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.