உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்று புதவை முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தி இருந்தார்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கும் முன்னதாக டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாஅதில் மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை இஸ்லாமிய மாநாடு நடந்துள்ளது. இந்த மாநாட்டில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இது தெரியாமல் பல மாநிலங்களில் இருந்து வந்த உறுப்பினர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கிடையில் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களை பரிசோதனை செய்வது மற்றும் தனிமைப்படுத்தும் வேலைகளை அரசு தீவிரப்படுத்தியது.
இதனை அடுத்து புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பத்தை சேர்ந்த சிலர் டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டு தெரிய வந்தது. உடனே புதுச்சேரி மாநில அரசு அவர்களை பரிசோதனை செய்து அப்பகுதி சாலைகளை மூடி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தது.
இந்த நிலையில் புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் ராகுல் அகர்வால், ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 21 பேரை தனிமை படுத்திக் கொள்ள உத்தரவிட்டார். இந்த 21 காவலர்கள் அரியாங்குப்பத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்பதால் இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது.