திமுக வின் குடுமியை பிடிக்கிறதா பாஜக? 2G வழக்கு மேல்முறையீடு
காங்கிரஸ் தலைமையிலான மத சார்பற்ற ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா வழக்கமான நடைமுறைகளை பின்பற்ற தவறியதால் இந்த புகார் எழுந்தது.
நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்குள்ளான இந்த விவகாரத்தை கடந்த 2009ம் ஆண்டு முதல் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறது. இதனை அடுத்து ஆ.ராசா 2010ல் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றத்தை நிரூபிக்க சிபிஐ தரப்பு தவறியதாக கூறி கடந்த 20 டிசம்பர் 2017ல் அனைவரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மேல்முறையீடு செய்தது. இது சம்பந்தப்பட்ட விசாரணை நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையில் கடந்த ஆண்டு பாஜக அரசால் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனை காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர் காட்சிகள் கடுமையாக எதிர்த்து வந்தன.
நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தீவிரமாக போராட்டங்கள் நடத்தப்பட்டது. இது மத்திய பாஜக அரசை எரிச்சல் அடைய செய்து வந்தது.
இதனை அடுத்து நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த 2G மேல்முறையீடு மனு மீதான விசாரணை மார்ச் 24ம் தேதி நடப்பதாக டெல்லி உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கு குடைச்சல் கொடுத்து வந்த திமுகவுக்கு பாஜக அரசு செக் வைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.