3 தரிசன சேவைகள் ரத்து!! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எப்போதுமே கூட்டம் அதிகமாக தான் இருக்கும். தற்போது கோடை விடுமுறையையொட்டி கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. ஏழுமலையானை தரிசனம் செய்ய 30 மணி நேரம் ஆகிறது 5 கிலோ மீட்டர் அளவிற்கு கியூ நிற்கிறது. தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.
பக்தர்களின் கூட்டமும் மிக அதிக அளவில் இருப்பதால் இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் நடைபெறும் சுப்ரபாத சேவையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதில் கூடுதலாக இலவச தரிசனம் செய்யும் பக்தர்களை அனுமதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அதே போல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் விஐபி கடிதம் மூலம் வரும் பக்தர்களுக்கும் ஜூன் 30 வரை அனுமதி இல்லை. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு மேலும் 22 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மேலும் மற்றுமொரு சேவையான வியாழக்கிழமை தோறும் நடைபெறும் திருப்பாவாடை சேவையிலும் ஜூன் 30 வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
இதனால் வியாழக்கிழமை தோறும் மேலும் ஒரு 2 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக தரிசனம் பெறுவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.