Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவர்களுக்கெல்லாம் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு

Tamil Nadu Assembly

Tamil Nadu Assembly

இவர்களுக்கெல்லாம் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜூலை 1 முதல் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது அறிவிக்கப்படாமலே இருந்து வந்தது. அந்தவகையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது.

மின்சார வாரியத்தின் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் திருத்தப்பட்ட அகவிலைப்படியானது அடிப்படை ஊதியத்தில் 31 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் மின்சார வாரியத்தின் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அகவிலைப்படியானது அடிப்படை ஊதியத்தில் 34 சதவீதம் வழங்கப்பட உள்ளது.

அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அகவிலைப்படியானது கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 30-ந் தேதி வரை கணக்கிடப்பட்டு 2 மாதத்திற்கான நிலுவைத்தொகை உடனடியாக வழங்கப்படும்.

மேலும், செப்டம்பர் மாதத்திற்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படி இம்மாதத்தின் ஊதியத்துடன் இணைத்து அக்டோபர் மாதம் பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை (இ.சி.எஸ்.) மூலம் வழங்கப்படும்.

அனுமதிக்கத்தக்க உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை கணக்கிட அடிப்படை ஊதியத்துடன் தனிப்பட்ட ஊதியத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். திருத்தப்பட்ட அகவிலைப்படியை கணக்கிடுகையில் 1 ரூபாய்க்கும் குறைவாகவும், 50 காசுக்கு அதிகமாகவும் இருக்குமாயின் அதனை அடுத்த ஒரு ரூபாயாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே, 50 காசுக்கு குறைவாக இருந்தால் அதனை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை.

இந்த திருத்தப்பட்ட அகவிலைப்படியானது தற்போது அகவிலைப்படி பெறும் முழுநேர பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் மற்றும் திருத்தப்பட்ட ஊதிய விகிதம் ரூ.4 ஆயிரத்து 100 முதல் ரூ.12 ஆயிரத்து 500 பெறும் பணியாளர்களுக்கும் அனுமதிக்கத்தக்கதாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய ஆணையின் படி, அகவிலைப்படியானது 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருப்பதன் மூலம் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version