Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கர்நாடகாவில் நேற்று 39047 பேருக்கு கொரோனா! பெங்களூரில் 3000 கொரோனா நோயாளிகளை காணவில்லை! அதிர்ச்சித் தகவல்!

karnataka corona

karnataka corona

கர்நாடகாவில் நேற்று 39047 பேருக்கு கொரோனா! பெங்களூரில் 3000 கொரோனா நோயாளிகளை காணவில்லை! அதிர்ச்சித் தகவல்!

தென்னிந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலமாக இருப்பது கர்நாடகா. அங்கு நாள்தோறும் 30 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், நேற்று 39,047 பேருக்கு கொரோனா இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 229 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில், பெங்களூர் நகரில் மட்டும் நேற்று 22,596 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 137 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் பெங்களூரின் நிலை படுமோசமாக இருப்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.

இதனால், கர்நாடாகாவில் தொற்று பரவலைத் தடுக்க பொது முடக்கம் நடைமுறையில் இருப்பதால், வாழ்வாதாரம் இழந்துள்ள பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில், பெங்களூரில் தொற்று பாதித்த 2,000 முதல் 3,000 பேர் தலைமறைவாகியுள்ளதாக அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் அசோகா அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.

தொற்று பாதித்தவர்களின் கைப்பேசி எண்களை அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது இருப்பிடம் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள அமைச்சர், இதனால், கொரோனா தொற்று மேலும் பலருக்கு பரவும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளார்.

மாயமானவர்களை கண்டறியும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் அசோகா, தொற்று பாதித்தவர்கள் அலட்சியமாக இல்லாமல், அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிகிச்சை பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version