ராஜேந்திரபாலாஜியை திடீரென்று சந்தித்த அந்த 4 முன்னாள் அமைச்சர்கள்!

0
148

பண மோசடி வழக்கில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறையிலடைக்கப்பட்டார். அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதனை அடுத்து திருச்சி சிறையில் இருந்து கடந்த 13-ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான அவர் சிவகாசி அருகே இருக்கின்ற திருத்தங்கல் வீட்டில் தங்கி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், நேற்று மதியம் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் ஆர் பி உதயகுமார், சிவி சண்முகம், சட்டசபை உறுப்பினர்கள் ராஜன்செல்லப்பா, பெரிய புல்லான் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் ராஜேந்திர பாலாஜியின் வீட்டிற்கு சென்று மாலை 4 .30 மணி அளவில் அவரை சந்தித்திருக்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை ராஜேந்திர பாலாஜி சால்வை அணிவித்து வரவேற்று இருக்கிறார். அதன் பிறகு வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் ராஜேந்திரபாலாஜியிடம் உரையாற்றி இருக்கிறார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு மாலை 6 மணி அளவில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றதாக சொல்லப்படுகிறது.

இந்த சந்திப்பு எதிர்பாராத விதத்தில் திடீரென்று நடைபெற்றதாக அதிமுக நிர்வாகிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாள் விழா திருத்தங்கலில் இருக்கின்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டில் அதிமுக நிர்வாகிகளுடன் கொண்டாடினார்.

கொண்டாட்ட நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்ற சூழ்நிலையில், அதனை அடுத்து 4 முன்னாள் அமைச்சர்களும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து வந்த சம்பவம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.