Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டிய 4 முக்கிய செயல்கள்..!!

ஒரு வீடு என்பது கூரை வீடாக இருக்கலாம் அல்லது ஓட்டு வீடு, மாடி வீடு இது போன்ற எந்த வீடுகளாக இருந்தாலும், அந்த வீட்டிற்குள் செல்லும் பொழுதே நமக்கு தெரிந்துவிடும், இந்த வீட்டில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று. ஆனால் ஒரு சில வீடுகளுக்கு சென்றால் நாம் எப்பொழுது வெளியே செல்வோம் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய வீடுகளில் தெய்வீக சக்தி இல்லை என்று அர்த்தம்.

ஒவ்வொரு வீட்டிற்கும் அதிர்வலைகள் என்பது இருக்கும். அந்த அதிர்வலைகளை நாம் நல்ல சக்திகளாக மாற்ற வேண்டும். ஒரு சில வீடுகளுக்கு செல்லும் பொழுது கோவிலுக்கு சென்று வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அத்தகைய உணர்வை நமது வீடுகளிலும் ஏற்படுத்த வேண்டும் என்றால், ஒரு சில விஷயங்களை கடைப்பிடித்தால் கண்டிப்பாக நமது வீடும் தெய்வ கடாட்சம் நிறைந்த வீடாக மாறும்.

1. பொதுவாக ஒரு வீட்டில் மந்திர ஓசைகள் என்பது கண்டிப்பாக ஒலிக்க வேண்டும். மந்திர ஓசைகள் என்பது நல்ல அழகான தெய்வீக பாடல்களை நமது வீட்டில் தினமும் ஒலிக்க செய்ய வேண்டும். இந்த தெய்வீக இசைகளை காலை மற்றும் மாலை போன்ற இரு வேளைகளிலும் விளக்கேற்றி வழிபடும் பொழுது ஒலிக்க செய்ய வேண்டும்.

மற்ற வீடுகளுக்கு இடையூறு இல்லாதவாறு நமது வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் பாடல்களை ஒலிக்க செய்ய வேண்டும். இந்த தெய்வீக பாடல்கள் நமக்கு தெரிந்தாலும் நாமும் விளக்கு ஏற்றும் பொழுது பாடிக் கொள்ளலாம். நாமும் சேர்ந்து பாடும் பொழுது தெய்வீக சக்தி மேலும் அதிகரிக்கும்.

2. ஒரு வீட்டிற்கு உள்ளே நாம் நுழைந்த உடனேயே, நமது கண்ணில் பார்க்கக்கூடிய காட்சிகளை விட, நமது மூக்கிற்கு வரக்கூடிய வாசனை தான் அந்த வீட்டிற்குள் முதலில் இழுக்கும். எனவே ஒரு வீட்டிற்குள் நுழையும் பொழுது வரக்கூடிய நறுமணம் என்பது மிகவும் முக்கியம்.

நாம் நம்மை எவ்வாறு பெர்ஃப்யூம் போட்டு நறுமணமாக வைத்துக் கொள்கிறோமோ, அதேபோன்றுதான் நமது வீட்டினையும் நறுமணமாக வைத்துக் கொள்ள வேண்டும். எனவே காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு நேரங்களிலும் சாம்பிராணி தூபம் போடுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த சாம்பிராணியின் நறுமணம் நமது வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

அதேபோன்று குங்கிலியம் பயன்படுத்தலாம். இந்த குங்கிலியம் என்பது தீய சக்திகளை விரட்டி, நமது வீட்டில் தெய்வீக சக்திகளை பரவச் செய்யும்.

3. ஒரு சில வீடுகளில் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே விளக்கேற்றி தெய்வத்தை வழிபடுவார்கள். ஆனால் அனைத்து நாட்களிலும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு நேரத்திலும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

அனைத்து நாட்களிலும் தெய்வத்திற்கு விளக்கு ஏற்றி, தெய்வீக ஒலிகளை ஒலிக்க செய்து, தீப தூப ஆராதனை காட்டுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இவ்வாறு தினமும் நமது வீட்டில் விளக்கேற்றி, நறுமணமாகவும், தெய்வீக இசையுடனும் வைத்துக் கொள்ளும் பொழுது நமது வீட்டில் தெய்வ கடாட்சம் அதிகரிக்கும்.

4. அதேபோன்று நாம் தினமும் தெய்வத்திற்கு நெய்வேத்தியம் என்பதை கண்டிப்பாக வைக்க வேண்டும். அதனுடன் மணி ஓசையையும் கண்டிப்பாக ஒலிக்க செய்து தெய்வத்தை வழிபட வேண்டும். நெய்வேத்தியம் என்பது இரண்டு கற்கண்டு, பேரிச்சம்பழம், வாழைப்பழம் இது போன்று எளிதாக கூட வைத்துக் கொள்ளலாம்.

தெய்வத்திற்கு தினமும் விளக்கேற்றி, சாம்பிராணி தூபம் போட்டு, நெய்வேத்தியம் வைத்து, தீர்த்தம் தெளித்து விட்டு, தீபம் காட்டும் பொழுது இந்த மணி ஓசையையும் ஒலிக்க செய்ய வேண்டும். இந்த மணி ஓசையானது தெய்வ சக்தியை நமது வீட்டில் அதிகரிக்க செய்யும்.

Exit mobile version