அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களின் பட்டியல் இதோ!

0
149

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.இந்தக் கூட்டத்தில் தற்போதைய ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரும் 13ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.அத்துடன் திமுகவின் ஆட்சி அமைந்தவுடன் வேளாண்மை துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்ய இருக்கிறோம் என்று ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி வேளாண்மைத் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

சென்ற வருடங்களில் பொறியியல், வேளாண்மை, மீன்வளம் கால்நடை சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்ததன் காரணமாக, அரசுப்பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பதற்கு தடையாக இருக்கின்ற காரணங்கள் என்னவென்று ஆய்வு செய்வதற்காகவும், அவர்களுடைய சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கண்டுபிடித்து உரிய தீர்வுகளை பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற மாண்புமிகு டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அந்த ஆணையத்தின் அறிக்கையும் பெறப்பட்டிருக்கிறது.

அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அந்த பரிந்துரைகளை செயல்படுத்தும் விதமாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி யதைப்போலவே அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மற்ற தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வடிவை நடப்பு சட்டசபை கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.