திருப்பூரிலிருந்து இருதலை கொண்ட பாம்புகளை கடத்திவந்து கேரளாவில் விற்பனை செய்ய முயற்சி செய்த 5 பேரை கேரள வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது,
கோழிக்கோடு வனத்துறை விஜிலென்ஸ் அதிகாரி சுனில் குமாருக்கு நேற்று காலை ஒரு ரகசிய தகவல் வந்தது. அதனடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் உதவியுடன் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று சோதனை செய்யப்பட்டது. அப்போது வீட்டினுள் இருந்த 5 பேரும் அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தார்கள்.
வனத்துறை அதிகாரிகள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர் பிறகு அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த சமயத்தில் ஒரு பையில் 2 இருதலை நாகங்கள் இருப்பது தெரியவந்தது.
அதிகாரிகள் அந்த பாம்புகளை பறிமுதல் செய்து 5 பேரையும் கைது செய்தார்கள். அதோடு அவர்கள் வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
பின்பு அந்த 5 பேரையும் கருவரகுண்டு வனத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் 5 பேரும் தமிழகத்தில் திருப்பூரைச் சேர்ந்த ராஜாமுகமது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் கரீம், கமருதீன், அனிபா முகமது, ஆனந்தன் உள்ளிட்டோர் என்பது தெரியவந்தது.
அவர்கள் 5 பேரும் திருப்பூரிலிருந்து 2 லட்ச ரூபாய் கொடுத்து 2 தலை உள்ள பாம்புகளை வாங்கி வந்து 10 லட்சம் ரூபாய்க்கு கேரளாவில் ஒரு நபருக்கு விற்பனை செய்வதற்காக முயற்சி செய்ததாகவும், இதன்காரணமாக, 5 பேரும் இரு பாம்புகளுடன் அப்துல் கரீம் வீட்டில் தங்கியிருந்தார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள் காவல்துறையினர்.
மேலும் இது குறித்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், பாம்பை விலைக்கு வாங்குவதாக தெரிவித்த நபரை தேடி வருவதாகவும், வனத்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.