ஓட்டு போடும் நபர்களுக்கு 5% தள்ளுபடி..உணவக உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பு..!!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தபால் ஓட்டுகள் மற்றும் காவலர்களுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் முதல் அனைவருமே வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் பல விதங்களில் விழிப்புணர்வை பிரச்சாரம் செய்து வருகிறது. இதுதவிர மாவட்ட வாரியாகவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அவர்களின் மாவட்டங்களில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் ஒரு அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி வாக்காளர்கள் வாக்களித்து விட்டு விரல்களில் வைக்கப்பட்ட மையுடன் ஏப்ரல் 20ஆம் தேதி செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களுக்கு சாப்பிட சென்றால் 5% தள்ளுபடி வழங்கப்படுமாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட் ஆட்சியர் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இதன்மூலம் அம்மாவட்ட மக்கள் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர். வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.