பள்ளிக்கூடத்தில் பாடம் கற்றுக் கொடுத்த பின்பு பரிட்சை நடக்கும். ஆனால் வாழ்க்கையில் பரீட்சை முடிந்த பின்பு தான் பாடம் கற்றுக் கொள்கிறோம். நமது வாழ்க்கையில் சில முக்கியமான பாடங்களை கற்றுக் கொண்டோம் என்றால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் மற்றும் மகிழ்ச்சியாக வாழலாம்.
1. நம்மிடம் இரண்டு விதமான செடிகள் வளர்ந்து கொண்டிருக்கும். அது பயம் மற்றும் நம்பிக்கை. நீங்கள் இதில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, எந்த செடிக்கு அதிகம் தண்ணீர் ஊற்றி வளர்க்கிறீர்களோ, எந்த செடியை அதிகம் கவனித்துக் கொள்கிறீர்களோ அது உங்களின் வாழ்க்கையில் வளர ஆரம்பிக்கும்.
ஒரு செயலை முதன் முதலில் செய்ய தொடங்கும் முன் எனக்கு பயமாய் இருக்கிறது என்று பலரும் கூறுவர். அந்த பயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தவர்களும் நீங்கள்தான். எனவே தான் அது உங்களிடம் அதிகமாக வளர்ந்து நிற்கிறது. பயம் என்பதை விட்டொழிந்து நம்மிடம் உள்ள நம்பிக்கை என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தால் நமது வாழ்க்கையில் வெற்றி அடையலாம்.
2. வாழ்க்கை என்பது மிகவும் அழகான ஒன்று என பலரும் கூறுவர். ஆனால் அனைவரது வாழ்க்கையும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதாவது அழகாக பார்த்தால் அழகான வாழ்க்கையாக தோன்றும், பந்தயமாக பார்த்தால் போட்டிகள் நிறைந்த வாழ்க்கையாக தோன்றும். பரிசாக பார்த்தால் வாழ்க்கை ஒரு பரிசாக தோன்றும், போராட்டமாக பார்த்தால் வாழ்க்கை ஒரு போர்க்களமாக தோன்றும்.எனவே வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பது அவரவர் கையில் தான் உள்ளது.
3. நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருப்பது நேரம் மற்றும் பணம். இந்த உலகில் மக்கள் பலரும் பணத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். ஆனால் நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது நேரம் மட்டும்தான். ஏனென்றால் நம்முடைய நேரம் என்பது நம்முடைய வாழ்க்கை ஆகும்.
பணம் தொலைந்து விட்டால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் நமக்கான நேரம் என்பதை நம்மால் சம்பாதிக்க முடியாது. நேரம் என்பது பணத்தைக் காட்டிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. எனவே இந்த வாழ்க்கை பாடத்தை நாம் தெரிந்து கொண்டால் சந்தோஷமான வாழ்க்கையை நாம் வாழ முடியும்.
4. ஒரு செயலை பெர்பெக்ட் ஆக செய்து முடிப்பதை காட்டிலும், செய்து முடிப்பதே சிறந்தது என்று கூறுகின்றனர். அதாவது நாம் நிறைய செயல்களை தொடங்காமல் இருப்பதற்கு காரணம், நான் ஒரு செயலை செய்தால் பெர்பெக்ட் ஆகத்தான் செய்வேன் என்று கூறி நிறைய செயல்களை செய்யாமல் இருக்கிறோம். அதற்கு பதிலாக நாம் எப்படியோ ஒரு செயலை செய்து முடிப்போம் என தொடங்கினால் போதும், நாம் அதை நன்றாகவே செய்து முடித்து விடுவோம். எதையும் செய்யாமல் இருப்பதை விட ஒரு செயலை செய்து, அதன் மூலம் அனுபவத்தை பெற்று இறுதியில் பர்பெக்ட்டாக செய்து முடிக்கலாம்.
5. பணம் என்பது நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய கருவி. மகிழ்ச்சி என்பது நம்மிடம் இருக்கக்கூடிய மிகப்பெரிய உணர்ச்சி. இவை இரண்டும் வேறு வேறு என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.நாம் நமக்கான மகிழ்ச்சியை ஒரு பொருள் வாங்குவதுடனும், பணம் சம்பாதிப்பதுடனும் தொடர்புபடுத்தி பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
அதாவது இந்த பொருளை வாங்கினால் தான் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கும், அல்லது இவ்வளவு பணம் சம்பாதித்தால் தான் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் பணம் என்பது வேறு, மகிழ்ச்சி என்பது வேறு என்பதை நாம் முதலில் புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.