60 ஆயிரம் கிலோ மீட்டருக்கு உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதே தனது லட்சியம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இந்தியாவில் சாலை வளர்ச்சி குறித்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, 63 லட்சம் கிலோமீட்டர் சாலைகளுடன் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சாலை கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளதாக கூறினார். இறக்குமதியை குறைத்து குறைந்த விலையில் மாசில்லா மாற்று எரிபொருளை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். சரக்கு போக்குவரத்தில் 70 விழுக்காடும் பயணிகள் போக்குவரத்தில் 90 விழுக்காடும் சாலைகளில் நடைபெறுவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சாலைகளுக்கு முக்கிய பங்குண்டு என்றும் அவர் கூறினார்.
ரூபாய் 111 லட்சம் கோடியை தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு இந்த ஆண்டு அரசு முதலீடு செய்து வருவதாகவும் அவர் கூறினார். உள்கட்டமைப்பு மூலதன செலவை 34% அதிகரித்து 5 .54 லட்சம் கோடியாக அரசு உயர்த்தி உள்ளதாகவும் தெரிவித்தார். உள்கட்டமைப்பு முதலீடு அதிகரிக் கப்பட்டுள்ளதன் மூலம் கொரோனா பெருந்தொற்றின் போது வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றார். ஒரு நாளைக்கு 40 கிலோமீட்டர் என்று 60 ஆயிரம் கிலோ மீட்டருக்கு உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதே தனது லட்சியம் என்றும் நிதின் கட்கரி கூறினார்.