அமெரிக்காவின் கரீபியன் கடற்பகுதியில் உள்ள ஹைதி தீவில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 227 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் கரீபியன் கடற்பகுதியில் உள்ள ஹைதி தீவில் நேற்று மாலை திடீரென பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால், வீடுகளில் இருந்த பொதுமக்கள் சாலைகளில் தலைதெறிக்க ஒட்டம் பிடித்தனர்.
அந்நாட்டு அரசு தெரிவித்துள்ள தகவலின் படி அங்கு 7.2 ரிக்டர் அளவு பயங்கரமான நிலநடுக்கம் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயின் லூயிஸ் டு சுட் பகுதியின் வடகிழக்கு பகுதியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பெரும்பாலன பகுதிகளில் கட்டங்கள் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி, 227 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலர் படுகாயங்கள் அடைந்துள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப் படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கானோர் நடுத்தெருவுக்கே வந்துவிட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். அந்நாட்டு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யப்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் சுமத்திரா கடல்பகுதியில் ஏற்பட்டால், தமிழக கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது இந்த நிலநடுக்கம்.