ஊராட்சி மன்ற தலைவர் மீது எட்டு கவுன்சிலர்கள் ஊழல் புகார்!!
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மீது 8 கவுன்சிலர்கள் ஆட்சியரிடம் ஊழல் புகார்.
விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஆட்சியர்!
வேலூர் மாவட்டம் சட்டமன்ற தொகுதி விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக குணசுந்தரி பாலசந்தர் இருந்து வருகிறார். கணவர் பாலச்சந்தர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தனது கணவர் மூலம் ஊராட்சி மன்ற தலைவர் கவுன்சிலர்களை மிரட்டுவதாகவும் . ஊராட்சியில் நடைபெறும் மன்ற கூட்டம் குறித்து தகவல் சொல்வதில்லை என்றும் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
விரிஞ்சிபுரம் ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ள நிலையில் எட்டு வார்டு கவுன்சிலர்கள் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சரிவர சப்ளை செய்வதில்லை.குப்பைகளை சரியாக அகற்றுவதில்லை. அதனை தட்டி கேட்டால் உங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று ஊராட்சி மந்திர தலைவர் பொறுப்பில்லாமல் பேசுவதாகவும் ,தீர்மான புத்தகத்தை யாரிடமும் காட்டுவதில்லை என குறிப்பிட்டு இருந்தனர்.
மேலும், ஊராட்சியில் செய்யப்படாத பணிகளை வேலை செய்ததாக காட்டி பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் மேம்பாட்டிற்காக தமிழக அரசு மூலம் கொடுக்கப்பட்ட டிராக்டரை தன் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி அதன் மூலம் மணல் கடத்தினர்.அது தற்போது மணல் கடத்திய ட்ராக்டர் என்று லத்தேரி காவல் நிலைய போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபாய்க்கு பணி செய்தாலும் அதன் மீது பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை பணி செய்ததாக கூறி அதிகப்படியான பணத்தை எடுக்கின்றனர்.ஏன் அவ்வாறு செய்கிறீர்கள் என கவுன்சிலர்களாகிய நாங்கள் கேட்டால் அதிகாரிகளுக்கு எல்லாம் பணம் தரவேண்டியுள்ளது. ஆகவே தான் அதை எடுக்கிறோம் என கூறுகின்றனர்.
விரிஞ்சிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பொது குடிநீர் விநியோக கிணற்றில் . இறைவன்காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் பால் தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவு நீர் மற்றும் விரிஞ்சிபுரம் சுடுகாட்டு பகுதியில் மழை நீர் வெள்ளம் வந்த போது சுடுகாட்டில் இருந்து அடித்துச் செல்லப்பட்ட பிணங்கள் அனைத்தும் அந்த கிணற்றில் தான் குவிந்துள்ளது.
இருப்பினும் அந்த கிணற்று நீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதால் நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக அந்த கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்திக்கு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.