Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! சூடுபிடிக்க தொடங்கிய தேர்தல் களம்!

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ராணிப்பேட்டை ,கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை அடுத்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணிகளை மாநில அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக முன்னெடுக்கப்பட்ட பணிகள் முடிவடையும் நிலையில் இருக்கிறது. தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் பணியாளர்கள் உள்ளிட்டோருடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி இருக்கின்றார்.

இதனை அடுத்து ஊரக உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் பயன்படுத்தப்பட இருக்கின்ற வாக்காளர் பட்டியல் மற்றும் ஓட்டுச்சாவடிகள் உளவுத்துறை ஏற்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக தேர்தல் ஆணையம் சென்ற மாதம் வெளியிட்டது. 76 பக்கங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறையில் 35 பக்கங்களில் வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான அறிவுரைகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பார்ப்பதற்கு வசதியாக வாக்குச்சாவடிகளில் சாய்வு தளம் போன்ற சிறப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது போன்ற பல வழிமுறைகளை தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தேர்தல் ஆயத்தப் பணிகள் தொடர்பாக 9 மாவட்ட ஆட்சியாளர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் விரிவான ஆலோசனை நடத்தி இருக்கின்றார்.

ஒன்பது மாவட்டங்களிலும் இருக்கின்ற தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான பயிற்சியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தார்கள். தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் மிக விரைவில் வெளியிட இருக்கின்றார். செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் சட்டசபையில் நேற்று ஊரக வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்து இருந்தார். அதில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.சென்ற 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் இருபத்தி ஏழு மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்காக வேலூர் மாவட்டத்தை வேலூர் மற்றும் திருப்பத்தூர், ராணிப்பேட்டை என்று மூன்று மாவட்டங்களாக அப்போது அரசு பிரித்து உத்தரவிட்டிருந்தது.

தற்சமயம் இந்த மாவட்டங்கள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு உட்பட்ட வால்வுகளை மறுவரையறை செய்ய வேண்டிய காரணத்தால், அந்த நேரத்தில் உடனடியாக தேர்தல் நடத்தப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.தற்சமயம் வார்டு வரையறை பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதன் காரணமாக, அந்த பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 9 மாவட்டங்களிலும் 22681 ஊராட்சிகள் மற்றும் 1381 ஒன்றிய வார்டுகள் 140 மாவட்ட ஊராட்சி வார்டுகள் ஆகியவை இருக்கின்றன. இவற்றுக்கு மிக விரைவில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆகவே உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதன் காரணமாக, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

முன்னரே அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளர் அவர்களுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை செய்தார். அதேபோல அதிமுகவின் தலைமை கழகத்தில் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் ஒன்பது மாவட்ட செயலாளர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.அதேபோல ஒவ்வொரு கட்சியின் ஆலோசனை கூட்டம் நடத்தி முடித்திருக்கின்றன. ஆகவே இத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும். அதன்பின்னர் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிடும் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version