கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தன்னுடைய மாமா வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவர் உடன் படிக்கும் 17 வயது சிறுவனை காதலித்து வந்தார் என்று சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அந்த சிறுவனும், சிறுமியும், புளியந்தோப்பிலுள்ள எல்லையம்மன் கோவில் வாசலில் நின்று திருமணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவத் தொடங்கியது.
இதுதொடர்பாக ராயபுரத்திலுள்ள குழந்தைகள் நல குழுவுக்கு வீடியோ ஆதாரத்துடன் புகார் வந்தது. இது தொடர்பாக குழந்தைகள் நல குழுவினர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காதல் செய்துவந்த சிறுவனும், சிறுமியும், கடந்த 7ஆம் தேதி எல்லையம்மன் கோவில் முன்பு தாலிகட்டி திருமணம் செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இதனை அவர்களுடைய நண்பர்கள் தங்களுடைய கைப்பேசியில் வீடியோ எடுத்து மற்ற நண்பர்களுக்கு அனுப்பியிருப்பது தெரியவந்திருக்கிறது.
இந்த நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிறுவனும், சிறுமியும், திருமணம் முடிந்தவுடன் ஹோட்டலுக்கு சென்று நண்பர்களுடன் விருந்து வைத்து சாப்பிட்டிருக்கிறார்கள், அதன் பிறகு அவரவர் வீட்டுக்கு சென்று விட்டார்கள்.
இதன் காரணமாக, சிறுமிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக வீட்டிலிருந்த உறவினர்களுக்கு தெரியவில்லை. திருமணம் தொடர்பான வீடியோ பதிவு வெளியே வந்த பிறகு தான் இந்த விஷயம் தெரியவந்திருக்கிறது.
காவல்துறையினர் விசாரணை நடத்துவது தொடர்பாக தெரிந்தவுடன் அந்த சிறுவன் தப்பி ஓடிவிட்டான். அவனை பிடித்து மேலும் விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டிருக்கிறார்கள்.
சிறுமியிடம் காவல்துறையினர் விசாரித்தபோது காதல் ஆசை வார்த்தை தெரிவித்து சிறுவன் பாலியல் ரீதியாக உறவில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து சிறுமியை மீட்டு காவல்துறையினர் கெல்லீசில் இருக்கின்ற மையத்தில் தங்க வைத்திருக்கிறார்கள். அவருக்கு ஆலோசனை வழங்குவதற்கு குழந்தைகள் நல அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.
அதோடு திருமணம் செய்து கொண்ட இருவரும் சிறுவன், சிறுமி, என்ற காரணத்தால், அவர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறையினர் ஆலோசித்து வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.