Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியின் போது 7 வயது சிறுவன் பலி!

#image_title

சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியின் போது 7 வயது சிறுவன் பலி!

பயிற்சியாளர்களின் அஜாக்கிரதையால் தான் சிறுவன் இழந்துவிட்டதாக பெற்றோர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார்.

சென்னை பெரியமேடு நேரு ஸ்டேடியத்தை அடுத்து உள்ளது மைலேடி பூங்கா மாநகராட்சிக்கு சொந்தமான இந்த பூங்காவில் காலை மாலை என ஏராளமானவர்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இது மட்டும் அல்லாமல் பூங்காவில் நீச்சல் குளமும் அமைந்துள்ளது.

இந்த நீச்சல் குளத்தில் காலை மாலை என ஏராளமான சிறுவர்கள் வந்து நீச்சல் பயிற்சி பெறுகின்றனர். சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பதற்காக இரண்டு நீச்சல் பயிற்சியாளர்கள் செந்தில் சுமன் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர்.

இந்த நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெறுவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 1500 ரூபாய் கட்டணம் செலுத்தி, ஓட்டேரி தாசன் மஹால் ஹாஜி முகமது அப்பாஸ் தெரு பகுதியில் வசித்து வரும் ராகேஷ் குப்தா, தன்னுடைய மகன் தேஜா குப்தாவை (7) சேர்த்து விட்டிருக்கிறார்.

கடந்த இரண்டு வாரமாக சிறுவன் தேஜா குப்தா அவருடைய தாத்தா மூலமாக தினமும் பூங்காவிற்கு வந்து பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெற்று வந்திருக்கிறார். நேற்று மாலை வழக்கம் போல தன்னுடைய தாத்தாவுடன் நீச்சல் குளத்திற்கு வந்து நீச்சல் பயிற்சியில் தேஜா குப்தா ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது அவருடன் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயிற்சியை மேற்கொண்டு இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென குளத்தில் இருந்த சிறுவன் தேஜா குப்தா மாயமானதை தொடர்ந்து பயிற்சியாளர் செந்தில் உடனடியாக நீச்சல் குளத்தில் குதித்து நீரில் மூழ்கிய சிறுவன் தேஜா குப்தாவை மீட்டு முதலுதவி செய்திருக்கிறார்.

இதன்பின்பாக உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிறுவனை எடுத்துச் சென்றுள்ளனர் அங்கு சிறுவனை சோதித்த மருத்துவர்கள்,சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிறுவனின் தந்தை பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

பயிற்சியாளர்களின் அஜாக்கிரதையால் தான் தனது மகன் இறந்துவிட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்திருக்கிறார்.
இந்த புகார் தொடர்பாக பெரிய மேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மைலேடி பூங்காவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல் குளத்தை, தனியாருக்கு டெண்டர் விட்டு முனியாண்டி என்பவர் அதனை பராமரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுவர்கள் பயிற்சி பெறும் நீச்சல் குளத்தில் பயிற்சியாளர்கள் விழிப்புடன் இருந்திருக்க வேண்டும் அவர்களது கவனக்குறைவால் தான் சிறுவன் உயிர் இழந்ததாக மைலேடி பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் பேட்டியளித்துள்ளனர்.

Exit mobile version