ஓபிஎஸ்க்கு அடி மேல் அடி.. இனி தேவர் கவச பொறுப்பாளர் இவர் இல்லை – நீதிமன்றம் அதிரடி!!

0
323
#image_title

ஓபிஎஸ்க்கு அடி மேல் அடி.. இனி தேவர் கவச பொறுப்பாளர் இவர் இல்லை – நீதிமன்றம் அதிரடி!!

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் 27 முதல் 30 ஆம் தேதி வரை ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.முத்துராமலிங்க தேவரின் சொந்த ஊரான ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஜெயந்தி விழாவின் போது முத்துராமலிங்க தேவருக்கு தங்கத்தால் ஆன கவச உடைகள் அணிவிப்பது கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் வழக்கத்தில் இருந்து வருகிறது.கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் மக்களின் கோரிக்கையை ஏற்று முத்துராமலிங்க தேவர் சிலைக்கு சுமார் 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அன்பளிப்பாக வழங்கினார்.இந்த கவசம் தேவர் குரு பூஜையின் போது மட்டும் அவருக்கு அணிவிக்கப்பட்டு பின்னர் மதுரை மாவட்டம் அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா கிளையில் இவை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் அக்டோபர் 27 முதல் 30 ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி குரு பூஜையின் பொழுது அதிமுகவின் பொறுப்பாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தான் பேங்க் ஆப் இந்தியா வங்கி லாக்கரில் உள்ள தங்க கவசத்தை பெற்று முத்துராமலிங்க தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் ஒப்படைத்து வந்தார்.பின்னர் தேவர் குரு பூஜை முடிந்த உடன் அந்த தங்க கவசத்தை மீண்டும் வங்கியில் ஒப்படைத்து வந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு ஓபிஎஸ் அவர்கள் அதிமுக கட்சியில் இருந்து நீங்கப்பட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார்.பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதை அடுத்து அதிமுகவின் புது பொருளாராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் வரவுள்ள முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெற்று முத்துராமலிங்க தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் வழங்கி மீண்டும் வங்கியுடன் ஒப்படைக்க அதிமுக பொருளாளர் என்ற முறையில் தனக்கு தான் உரிமை இருக்கிறது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திண்டுக்கல் சீனிவாசன் கடந்த 6 ஆம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் இது குறித்து ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.இந்நிலையில் நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டு விட்டதால் இனி முத்துராமலிங்க தேவர் கவசப் பொறுப்பு தன்னிடம் தான் வழங்க வேண்டுமென்று திண்டுக்கல் சீனிவாசன் தரப்பில் வாதிடப்பட்டது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் ஓ.பன்னீர் செல்வம் தான் இருக்கிறார்.அவர் முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கப்பட வில்லை.இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.எனவே தேவர் கவச பொறுப்பு ஓ.பன்னீர் செல்வத்தை தவிர வேறு யாருக்கும் வழங்க கூடாது என்று ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,உரிமை யார் வேண்டுமானாலும் கோர முடியும்.சட்டப்படி பார்த்தால் முத்துராமலிங்க தேவர் தங்க கவச பொறுப்பு அதிமுக பொருளாளராக யார் இருக்கிறாரோ அவருக்கு தான் வழங்க முடியும்.

எனவே முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் பேங்க் ஆப் இந்தியா வங்கி வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.இதனால் ஓபிஎஸ் அவர்களின் செல்வாக்கு தொடர்ந்து சரிவை நோக்கி செல்கிறது.இந்த தீர்ப்பின் மூலம் மீண்டும் இபிஎஸ் அவர்களின் கை மேலோங்கி இருக்கிறது.இதனால் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.