நடுரோட்டில் துடிதுடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் வேடிக்கை பார்த்து சென்ற மக்கள்.!

0
279
Madurai

காலம் செல்ல செல்ல மனிதர்களிடத்தில் மனிதமும் குறைந்து கொண்டே செல்கிறது. ஐந்தறிவு கொண்ட விலங்குகள் கூட அவற்றின் கூட்டத்தில் ஒரு விலங்கிற்கு ஆபத்து என்றால் யோசிக்காமல் உடனே ஓடிச்சென்று உதவும். ஆனால், மனிதர்களாகிய நாம் தான் சக மனிதனுக்கு என்ன நடந்தாலும், ஒன்னு நின்று வேடிக்கை பார்க்கிறோம் இல்லை கண்டுகொள்ளாமல் நகர்ந்து சென்று விடுகிறோம்.

அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது மதுரை அருகே நடந்துள்ளது. மதுரை திருமங்கலம் நெடுஞ்சாலையில், கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் சாலை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட அந்த நபர் தலைசுற்றி நடுரோட்டிலேயே மயங்கி விழுந்து துடிதுடித்து கொண்டிருக்கிறார்.

அவரை தாண்டி அத்தனை பைக்குகள், கார்கள் மற்றும் பேருந்துகள் செல்கின்றன. ஆனால் ஒருவர் கூட இறங்கி வந்து அவருக்கு உதவி செய்ய வேண்டுமென நினைக்கவில்லை. மாறாக அவரை வேடிக்கை மட்டுமே பார்த்து சென்றனர். இந்நிலையில், அந்த வழியாக பைக்கில் சென்ற காவலர் ஒருவர் இதை பார்த்து பதறிப்போய் வண்டியை நிறுத்தி விட்டு ஓடி வந்து அந்த நபரை தூக்கினார்.

காவலரை பார்த்து அருகில் இருந்த மற்றொரு நபரும் உதவிக்கு ஓடி வர இருவரும் சேர்ந்து அந்த நபரை அருகில் இருந்த மரத்தடியில் அமர வைத்து தண்ணீர் கொடுத்துள்ளனர். இந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அடிக்கும் வெயிலில் மனிதம் கூட மரணித்து விட்டதோ என்னவோ? ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவகூட பலரும் தயக்கம் காட்டி வருகிறார்கள்.