சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்திய பேப்பர் போர்டு உற்பத்தி ஆலையம்!! 3 கோடியே 31 லட்சம் ரூபாய் அபராதம்!

0
161
#image_title

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக கூறி, பேப்பர் போர்டு உற்பத்தி ஆலையிடம் விளக்கம் கேட்காமல் 3 கோடியே 31 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளைதம் தாலுகாவில் உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் ஐ.டி.சி. நிறுவனத்தின் பேப்பர் போர்டு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது.

தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி, கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், இந்த ஆலையில் சோதனை நடத்தினர்.

பின்னர், காற்று மற்றும் நீர் மாசு கட்டுப்பாட்டு சட்டப்படி, ஐ.டி.சி. ஆலைக்கு 3 கோடியே 31 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. இந்த அபராதத்தை செலுத்தும் வரை தினமும் 30 ஆயிரம் ரூபாய் கூடுதல் அபராதமும் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியல் உத்தரவிட்டது.

தங்கள் தரப்பு விளக்கத்தை பரிசீலிக்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஐ.டி.சி. நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு, சுற்றுச்சூழல் பாதிப்புக்கு அபராதம் விதிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அதிகாரம் உள்ளது என்ற போதும், அபராதத்தை நிர்ணயிக்கும் முன் மனுதாரர் தரப்பின் விளக்கத்தை கேட்காதது, இயற்கை நீதியை மீறிய செயல் எனக் கூறி, 3 கோடியே 31 லட்சம் அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம், மனுதாரர் நிறுவனத்துக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி, மூன்று மாதங்களுக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.