பண்ருட்டியில் போலியாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையை நடத்தி வந்த கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பண்ருட்டி எல்.என் புரம் எஸ்.பி.ஐ வங்கியின் ஓய்வு பெற்ற ஊழியரான சையது கலில் இவருக்கு கமல்பாபு என்ற மகன் உள்ளார்.இவர் எஸ்.பி.ஐ வங்கி நார்த் பாஜர் என்ற பெயரில் காசோலை, வரைவோலை,ஆவணங்கள் தயாரித்து வந்துள்ளார்.மேலும் வங்கியின் பெயரில் போலியான இணையதளத்தையும் உருவாக்கியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் யாரும் இதைப்பற்றி சந்தேகப்பட மாட்டார்கள் என்று நினைத்து கமல்பாபு,ஏ.குமார்,மற்றும் எம்.மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து போலியாக இந்த வங்கி கிளையை தொடங்கியுள்ளனர்.
அந்த போலியான வங்கிக்கிளையின் ரசீதை வாடிக்கையாளர் ஒருவர் காட்டியதற்கு பின்னர் அதிகாரிகள் அந்த போலி கிளையை பார்வையிட்டனர்.அதன் பிறகு அவர்கள் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்த புகாரை அடுத்து அந்த மோசடியில் ஈடுபட்ட 3 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.மேலும் இவர்கள் எந்த மாதிரியான மோசடியில் ஈடுபட்டு உள்ளனர் என்பதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் அம்பேத்கர் கூறியதாவது,கமல் பாபுவின் பெற்றோர் முன்னால் எஸ்பிஐ வங்கியின் ஊழியர்கள். இதனால் இவர் வங்கி எவ்வாறு செயல்படுகிறது என்பதை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொண்டுள்ளார் மேலும் இவர் தந்தை இறந்து விட்டதால் அதன் பிறகு இவர் வாரிசு அடிப்படையில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.
அவரது விண்ணப்பம் குறித்து நடவடிக்கை எடுக்காகதால் அவரே ஒரு கிளையை தொடங்கி விட்டதாக காவல் ஆய்வாளர் அம்பேத்கர் கூறியுள்ளார்.