வங்கக்கடலில் வலுவடைந்துள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 33 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் நவம்பர் மாதம் 9ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. ஆகவே அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அது தீவிர மழை பெய்யாமல் விட்டு,விட்டு நேற்று மழை பெய்து கொண்டு இருந்தது.
இன்றைய நிலவரம் தொடர்பாக இந்திய வானிலை ஆராய்ச்சி மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது, தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி காணப்பட்டது என்று கூறியுள்ளார்.
இது இன்று தமிழகம் மற்றும் புதுவை இடையே கரையை கடக்கும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் முதல் இலங்கை வரையில் காற்றழுத்த தாழ்வு பகுதி பரவி இருப்பதால் இது குறிப்பிட்ட இடத்தில் கரையை கடக்கும் என்று தெரிவிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
இன்று கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக மற்றும் கேரள பகுதிகள் மூலமாக நகர்ந்து அரபிக் கடலுக்குச் சென்று ஏமன் நாடு வரையில் பயணிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட 17 மாவட்டங்கள் புதுவை காரைக்கால் ஆகிய இடங்களிலும் மிக கனமழை பெய்யும். ஆகவே இந்த பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களிலும் ஓரிரு பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலான பகுதிகளில் நாளை கனமழையும் வரும் 14,15 உள்ளிட்ட தேதிகளில் மிதமான மழையும் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.