Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு பேருந்து செல்ல முடியாமல் காவல்துறை தடுப்பு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் போராட்டம்

#image_title

அரசு பேருந்து செல்ல முடியாமல் காவல்துறை தடுப்பு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் போராட்டம்

நாகையில் அரசு பேருந்து செல்லமுடியாமல் காவல்துறை தடுப்பு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட நபரை காவல் உதவி ஆய்வாளர் அடித்து, பூட்ஸ் காலால் முகத்தில் உதைத்து கைது செய்யப்பட்ட பரபரப்பு காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக எல்லையான நாகை மாவட்டம் நாகூர் அடுத்துள்ள வாஞ்சூர் ரவுண்டானாவில் இருசக்கர வாகனத்தில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நான்கு சாலைகளில் இரண்டு சாலைகள் ஒருவழி பாதையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரசு பேருந்து மற்றும் பெரு வாகனங்கள் வளைய முடியாமல் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தடுப்புகள் அடைக்கப்பட்டு இருந்ததால் கும்பகோணத்தில் இருந்து நாகை வந்த இரண்டு அரசு பேருந்துகள் பயணிகளுடன் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவ்வழியே சென்ற இதனை அறிந்த உள்ளூர் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் சிலர் தடுப்புகளை அகற்றி அரசு பேருந்து எளிமையாக செல்ல வழிவகை செய்ய வேண்டுமென கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயணிகள் வெகுநேரம் சிரமபட்டதை அடுத்து வாக்குவாதத்திற்கு பிறகு தடுப்புகள் அகற்றப்பட்டு பேருந்துகள் செல்ல வழிவகை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பழனிவேல் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை கடுமையாக தாக்கி ஒருமையில் பேசினார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த உதவி ஆய்வாளர் பழனிவேல் போராட்டம் நடத்திய நபரை கடுமையாக தாக்கி, காவல் வாகனத்தில் ஏற்றி தனது பூட்ஸ் காலால் முகத்தில் உதைத்து அடாவடியில் ஈடுபட்டார்.

மேலும் பொது இடத்தில் தகாத வார்த்தையால் பேசினார். தொடர்ந்து காவல் வாகனத்தில் ஏற்றிய பிறகும் வாகனத்தின் உள்ளே இருந்த சக காவலர்கள் கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்து தாக்கியபடி காவல் நிலையம் அழைத்து சென்றனர். அரசு பேருந்து எளிமையாக செல்லும் வகையில் காவல் தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நபரை காவல் உதவி ஆய்வாளர் அடித்து உதைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version